விஜயகாந்த் நடித்த தவசி படத்துக்கு வசனம் எழுதியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தது இணையத்தில் கடுமையான கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது. 


உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.


இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலில் மாற்றப்பட்டுள்ளது.  அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இறுதி சடங்கில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் 
சென்னை செல்லும்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றாலே உங்களுக்கு அச்சம் என்பதும் துணிவும்தான். தவசி படத்தில் அவருடன் பணியாற்றும் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.  விஜயகாந்த் இடத்தை   நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைபோல ஒரு சிறந்த மனிதர் ஒருவர் வருவது கடினம். திரை உலகின் உச்சத்துக்கு சென்றபோதும் அது தலையில் ஏறாமல் பார்த்துகொண்டவர்.


ரஜினி, கமல் போன்றோர்கள் விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள்.ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் இருக்கும் போதே அரசியலுக்கு வந்து 10.5 விழுக்காடு வாக்குகள் வாங்கி எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது என்பது சாதாரண விஷயம் அல்ல. விஜயகாந்த் பார்க்கதான் கம்பீரமா இருப்பார். ஆனால் பேசி பழகுவதில் மனதளவில்  அவர் ஒரு குழந்தைதான்” என உருக்கமாக தெரிவித்தார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 


இப்படியான நிலையில் சீமான் உண்மையிலேயே தவசி படத்துக்கு வசனம் எழுதினாரா என்ற சந்தேகம் எழுவதாக இணையத்தில் சிலர் பதிவிட தொடங்கினர். வழக்கம்போல சீமான் கட்டுக்கதை கட்டுவதாக குற்றம் சாட்டினர்.மற்றொரு தரப்பினர் சீமானுக்கு ஆதரவாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் தவசி படத்தின் நன்றி அறிவிப்பில் சீமான் பெயர் இடம் பெற்றிருக்கும்.  அதேபோல் உள்ளே டைட்டிலில் திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற இடத்தில் உதய சங்கர் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் உண்மையில் தவசி படத்தில் சீமானின் பங்களிப்பு உண்டு. துளசி வாசம் மாறுனாலும் மாறும். இந்த தவசி வாக்கு மாற மாட்டான் என்ற வசனத்தை எழுதியதே சீமான் தான் என்பது இங்கு பலரும் அறியாத செய்தி.ஆக மொத்தம் தவசி படத்தில் விஜயகாந்தின் அதிரடி வசனங்களுக்கு சீமானும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.