இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.’மக்கள் செலுத்தும் வரிதான் பள்ளிகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது, நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது’ என வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விஜய் தரப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வது இது முதல்முறையல்ல.
கடந்த 2018 ஜனவரி மாதத்தில் நடிகர் அமலா பால் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு கேரளாவில் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக அதனைப் புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்தது சர்ச்சைக்குள்ளானது. ஃபாஹத் பாசில், சுரேஷ் கோபி எனப் பல நடிகர்கள் இதே போலத் தங்களது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ்களுக்கு வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்தது பரபரப்பானது. கேரளாவில் மட்டும் மொத்தம் 850 பேர் இதுபோல சொகுசு கார்களுக்கு வரி கட்டுவதைத் தவிர்க்க புதுச்சேரியில் பதிவு செய்தது தெரிய வந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் ரக காரின் தொடக்க விலை 6.95 கோடி.ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களுக்கான நுழைவு வரி அதன் மொத்த மதிப்பில் 14.5 சதவிகிதம். ஆக 47.93 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தனி நபர்கள் மற்றும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பினால் மட்டும் வருடாந்திரமாக ரூ.75000 கோடி வரை வரிகளில் இழப்பு ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.41 சதவிகிதம். நமது சுகாதார பட்ஜெட்டில் 44.70 சதவிகிதம், கல்விக்கான செலவீட்டில் 10.68 சதவிகிதம் , கொரோனா பேரிடர் காலத்தில் தூக்கம் தொலைத்து வேலை பார்க்கும் செவிலியர்களில் 42.30 லட்சம் நர்சுகளில் வருடாந்திர சம்பளம் என வரிசையாகப் பட்டியலிடுகிறது இந்த புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கும் ’ஸ்டேட் ஆஃப் டேக்ஸ் ஜஸ்டிஸ்’ அறிக்கை.
ஏன் இந்த வரி ஏய்ப்பு?
பொருளாதார நிபுணர் ஸ்ரீராம் சேஷாத்திரியிடம் கேட்டோம், ‘ இந்தியாவில் வரி ஏய்ப்பைவிட வரி கட்டுவதை சட்ட ரீதியாகத் தவிர்ப்பதுதான் (Tax avoidance) அதிகம். தனது வருமானத்தையே காட்டாமல் இருப்பதுதான் வரி ஏய்ப்பு எனப்படும். ஆனால் தன்னுடைய வருமானத்தைக் காண்பித்து அதில் ஏற்பட்ட செலவுகள் என நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்ட பில்லை எல்லாம் அதில் இணைத்துக் காண்பிப்பது வரி கட்டுவதைத் தவிர்ப்பதன் கீழ் வரும். ஜி.எஸ்.டி. வந்த பிறகுதான் இதுபோன்ற நிறைய செலவுகளைச் சேர்ப்பதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. அது தனிநபர் தன்னுடைய செலவைக் காண்பித்து வரி கட்டுவதைத் தவிர்ப்பதைத் தடுத்தது. நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்க்குக் கோரிக்கை வைத்ததே அபத்தம். இறக்குமதிக்கான நுழைவு வரி என்பது சட்டம். வரிச்சலுகைகளுக்கு சட்டத்தில் இடம் கிடையாது. பார்க்கப்போனால் வரியைச் செலுத்தாத நிலையில் இந்த சொத்தை ஜப்தி செய்ய சுங்கத்துறைக்கு அதிகாரம் உண்டு. நடிகர்கள் போன்ற தனிநபர்கள் இல்லாமல் இங்கே இருக்கும் குறுநிறுவனங்களால் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பீடுதான் அதிகம். ஆனால் இதுபோன்ற இழப்பீடுகள் ஜி.எஸ்.டி. வந்த பிறகு கனிசமாகவே குறைந்துள்ளது’ என்கிறார்.
Also Read: 'ரியலிலும் ஹீரோவாக இருங்கள்'' - நடிகர் விஜய்யை வெளுத்துவாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!