முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு இறக்குமதியான சுங்க வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் தற்போது 16 கோடி வரை கிடைத்துள்ளது. மேலும், எஸ்எம்ஏ விற்கு செலுத்தப்படும் ஊசியின் விலை 16 கோடி ரூபாய், மட்டுமில்லாமல், கூடுதலாக இறக்குமதி வரி 6 கோடி ரூபாய் இந்திய அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மொத்தம் ஊசியின் மொத்த மதிப்பு 22 கோடி ஆகும்.
இந்நிலையில், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது வரி விலக்கு அளிக்க வேண்டும். மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி, ஜிஎஸ்டி, இதர வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கத்திற்காக இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தொலைபேசி வாயிலாக பேசினேன். உதவுவதாக தாயுள்ளத்துடன் பரிவோடு கூறியுள்ளார்கள்’ எனப் பதிவிட்டிருந்தார். சிறுமி மித்ராவிற்கு உதவி செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வானதி சீனிவாசன் கடிதமும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமி மித்ராவிற்கு செலுத்தப்படக்கூடிய ஊசியிற்கான இறக்குமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பலர் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு மாநில அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 6 கோடி இறக்குமதி வரியை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதைப்போலவே, மித்ராவுக்கு உதவ மாநில அரசிடம் பல முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாகவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை நேரில் சென்று மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆறு கோடி இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் மித்ராவின் பெற்றோர்.
சிறுமி மித்ராவுக்காக குரல் கொடுக்கும் வானதி - வரியை நீக்கக் கோரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை!