இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு Entry Tax வசூலிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி வசூலிக்க விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த அபராதத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.






 


 


மேலும், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது கண்டனம் தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வரி என்பது நன்கொடையல்ல; கட்டாயம் பங்களிப்பு என கருத்து கூறினார்.









விஜய் சார்பாக இந்த வழக்கை அவரின் வழக்கறிஞர் தொடர்ந்திருந்தார். ஆனால், தாக்கல் செய்த மனுவில், விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டாலும், அவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை குறிப்பிடவில்லை. யார் அந்த விஜய் என்று நீதிபதி கேட்ட பிறகே, அவர் நடிகர் விஜய் என்று வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிரபல நடிகராக இருக்கும் விஜய், படங்களில் சமூக கருத்துக்களை கூறும் அவர், தனது தொழிலைக் கூட குறிப்பிடாமல் வழக்கை தொடர்ந்தாரா என்று நீதிபதி கடிந்து கொண்டார்.






 


நடிகர் விஜய்யை பின்தொடரும் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ரோல்மாடலாக இருக்கும் விஜய், அரசாங்கம் விதிக்கும் வரியை கடமை தவறாமல் கட்ட வேண்டும் என்ற நோக்கில் நீதிபதி இந்த வழக்கில் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.


விஜய் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருவது சமீபகாலமாக நடைபெற்றது. அப்போதெல்லாம், அவர் எதுவும் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று தெரியவந்தது. ஆனால், பல கோடிகள் சம்பாதிக்கும் விஜய், காருக்கு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்து, தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிக்கொண்டதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்