பிச்சைக்காரன் 2 பட் வெளியீட்டைத் தள்ளி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக படத்தைத்  தயாரித்துள்ள விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இயக்குநர் விஜய் ஆண்டனி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்துக்கும் ஆய்வுக்கூடம் படத்துக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும், படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் விஜய் ஆண்டனி தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.


“மேலும் பிச்சைக்காரன் கதைக்கரு பொதுவெளியில் உள்ளது. இதே கதைக்கருவுடன் 1944ஆம் ஆண்டு தொடங்கி பல மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கதையின் கருவை மனுதாரர் உரிமை கோர முடியாது” எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகணபதி எனும் நபர் தாக்கல் செய்திருந்த மனுவில், நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தங்கள் தயாரிப்பு நிறுவனம்  சார்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்ததாகவும், இப்படத்தின் கதையை அனுமதியின்றி நடிகர் விஜய் ஆண்டனி காப்பியடித்து ‘பிச்சைக்காரன் -2’ படத்தை எடுத்துள்ளதாகவும் எனவே வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


இதேபோல் பரணி என்பவரும் முன்னதாக தொடர்ந்த வழக்கில் பிச்சைக்காரன் 2 தன்னுடைய மூலக்கதை என்றும் தான் இந்தக் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளதாகவும் கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.


இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை வரும் ஏப்.25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


சசி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி  ஹீரோவாக நடித்திருந்தார்.  இப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், முன்னதாக  பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. 


பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் லங்காவி தீவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இதில் அவரது தாடை, மூக்கு எலும்புகள் உடைந்து கடும் காயம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று மீண்டு வந்தார். 


மேலும் படிக்க: 15 yrears of Arai En 305-il Kadavul: கடவுளுக்கே டகால்டி காட்டிய மானிடர்கள்... 15 ஆண்டுகளை கடந்து பின்பு கிடைக்கும் ரெஸ்பான்ஸ்... 'அறை எண் 305-ல் கடவுள்' வெளியான நாள்