ஐபிஎல் 2023 சீசனில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் ஆட்டம் முழுவதும் நிறைந்து இருந்த நிலையில், அஜிங்க்யா ரஹானே அற்புதமாக ஜம்ப் செய்து பவுண்டரி லைனில் ஒரு சிக்ஸரை தடுத்தது ஆட்டம் மொத்தத்தில் இருந்தும் தனித்து தெரிந்தது.


முக்கியமான போட்டி


இரு அணிகளும் 440 ரன்களுக்கு மேல் அடித்த அதி பயங்கரமான பேட்டிங் பிட்சாக காணப்பட்ட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் முழுவதும் சிகப்பு அளவுக்கு மஞ்சளும் நிறைந்து இருந்தது சென்னை அணியின் ஃபேன் பேஸை மற்றுமொருமுறை நிரூபித்தது. குறிப்பாக தோனி ஆடிய ஒரே ஒரு பந்துக்கு வந்த சத்தமும், மொபைல் டார்ச் ஒளியும் சொல்லும் சிஎஸ்கே வரலாற்றை. அப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் 226 ரன்கள் அடித்தும் கடைசி ஓவரில் வெல்லும் நிலை ஏற்பட்டது.



இமாலய ரன் குவிப்பில் சிஎஸ்கே


இடையில் மளமளவென சிக்ஸர்களை பறக்கவிட்டு மரண பயத்தை காட்டிய மேக்ஸ்வெல் - டு பிளஸிஸ் ஜோடி ஆட்டமிழந்த பிறகுதான் ஆட்டம் சென்னை அணி பக்கம் திரும்பியது. முதலில் ஆடிய சென்னை அணி கணிசமாக ரன்களை குவிக்க, தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு அஜிங்க்யா ரஹானே (20 பந்துகளில் 37) உடன் இணைந்து 74 ரன் குவித்தார். பின்னர் வந்து இமாலய சிக்ஸர்களை பறக்க விட்ட சிவம் தூபே, 101,102 மற்றும் 111 மீட்டர் சிக்ஸர்களை விளாசினார். ஒரு வழியாக 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவிதனர்.


தொடர்புடைய செய்திகள்: IPL Points Table: திக்..திக்..பெங்களூருவில் சென்னை செய்த சம்பவம்.. ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?


மரணம் பயத்தை காட்டிய ஆர்சிபி ஜோடி


தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணி கோலி உட்பட இரண்டு விக்கெட்டுகளை விட்டாலும், கிளென் மேக்ஸ்வெல் (36 பந்துகளில் 76 ரன்), கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (33 பந்தில் 62 ரன்) ஆகியோர் அதிரடி காட்டினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து ஆர்சிபி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை அதிகரித்தனர். ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் கைவிட்டு போனது. எப்படியோ 8 ரன்கள் வித்யாசத்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி நிறைய கேட்ச்களை தவற விட்டனர். தோனியே ஒரு கேட்சை தவற விட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.






சூப்பர் மேனாக பறந்த ரஹானே


ஆனால் எல்லோரும் ஃபீல்டிங்கில் சொதப்ப பவுண்டரி லைனில் நின்ற ரஹானே சூப்பர்மேனாக மாறி ஒரு பந்தை சிக்சரில் இருந்து தடுத்தது பலரை அதிசயிக்க செய்தது. இரண்டாவது இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிளென் மேக்ஸ்வெல் அடித்த பந்தைதான் அவர் பாய்ந்து தடுத்தார். மேக்ஸ்வெல் லாங் ஆப் திசையில் பேட்டை வீச கண்டிப்பாக சிக்ஸருக்கு சென்றுவிடும் என்று நினைத்த பந்தை பறந்து பிடித்து உள்ளே தூக்கி போட்டு பவுண்டரிக்கு வெளியில் விழுந்தார் ரஹானே. ஐந்து ரன்களை சேமித்த அவரது சூப்பர்மேன் செயல்பாடு கிட்டத்தட்ட மேட்சையே காப்பற்றியதாக எடுத்துக்கொள்ளலாம். இந்த ஐந்து ரன்கள் கிடைத்திருந்தால் கடைசி ஓவர் ப்ரெஷர் ஆர்சிபி அணிக்கு இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும். அதி வெற்றிக்கு கூட வழி வகுத்திருக்கலாம். வெறும் ஐம்பது லட்சத்திற்கு எடுக்கப்பட்ட ரஹானே அளப்பரிய பங்களிப்பை இப்போதே கொடுத்து சென்னை அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரராக உயர்ந்துள்ளார் என்று பலர் புகழ்ந்து வருகின்றனர்.