இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது. தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜய் ஆண்டனி


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட அவரின் சினிமா பயணம் என்பது மிகவும் கரடு முரடானது. காரணம் விஜய் ஆண்டனி சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டார். மிகுந்த கஷ்டமான சூழலுக்கு அவர் இன்றைக்கு இந்த இடத்தை அடைந்துள்ளது மிகப்பெரியது. அதனாலேயே எங்கு சென்றாலும் தற்கொலை தடுப்பு எண்ணங்கள் உள்ளிட்ட பல விழிப்புணர்வு கருத்துகளை விஜய் ஆண்டனி பேசி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்.


மகள் தற்கொலை : இப்படியான நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் கலாச்சார பிரிவின் தலைவராகவும், படிப்பிலும் சிறந்து விளங்கிய அந்த 16 வயது சிறுமி நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


இந்த தகவல் தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலராலும் இப்படி ஒரு நிகழ்வை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சமூக வலைத்தளங்கள் முழுக்க நேற்று  மீராவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, விஜய் ஆண்டனிக்கும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பார்த்திபன், சித்தார்த், கார்த்தி, பிரபுதேவா, கூல் சுரேஷ், மன்சூர் அலிகான், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், லாரன்ஸ், சத்யராஜ், சிபிராஜ், பரத், சிலம்பரசன், கிருத்திகா உதயநிதி, அமைச்சர் உதயநிதி, மிஷ்கின், குஷ்பூ, ஷோபா சந்திரசேகர், யுவன் ஷங்கர் ராஜா, அருண் விஜய், சதீஷ், சந்தானம் என பலரும் நேரில் வருகை தந்து விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


மேலும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #VijayAntonyDaughter, #RIPMeera ஹேஸ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


இறுதிச்சடங்கு


மீரா தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது உடலை தேனாம்பேட்டை போலீசார் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீராவின் விபரீத முடிவு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த பிறகு வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட மீராவின் உடலுக்கு குடும்பத்தினர், பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். 


தொடர்ந்து நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடலை அடக்கம் செய்யும் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் இடம் கிடைக்க கால தாமதம் ஆனதால் இன்று காலை இறுதிச்சடங்குகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் வைத்து இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 


மகளின் உடல் நல்லடகத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என நினைத்த விஜய் ஆண்டனி குடும்பத்தினர்  ஊடகத்தினர் யாரையும் கல்லறை தோட்டத்தினுள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மகளின் பிரிவை தாங்க முடியாமல் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து உள்ளது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.  




மேலும் படிக்க: Video Vijay Antony: 'தற்கொலை எண்ணம் வருதா?’ .. விஜய் ஆண்டனி பேசிய உருக்கமான வீடியோ.. கண் கலங்கும் ரசிகர்கள்..