ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வீரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.


‘அன்பறிவு’ படத்துக்குப் பிறகு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகக் கலைஞராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் ‘வீரன்’(Veeran).


 ‘மரகத நாணயம்’ திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் ஈர்த்த ஏஆர்கே சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆதிரா,காளி வெங்கட், வினய், முனீஸ்காந்த், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். ஃபேன்டஸி காமெடியாக ஆக்‌ஷன் கலந்து உருவான இப்படத்தின் ட்ரெய்லர், 2021ஆம் ஆண்டு மலையாளத்தில் பாசில் ஜோசப் இயக்கத்தில்  வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மின்னல் முரளி’  படத்தின் காப்பியா என கேள்விகள் எழும்பின.


ஆனால் இதனை மறுத்து முன்னதாக வீரன் மற்றும் மின்னல் முரளி படக்குழு என இரு தரப்பினருமெ விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில், எதிர்பார்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வீரன் படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.


சமூக வலைதளங்களில் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எனினும் முன்னதாக கோலிவுட்டில் வெளியான சூப்பர்ஹீரோ படங்கள் எதுவும் சரியாக சோபிக்காத நிலையில், இந்தப்படம் ஒரு தரமான சூப்பர் ஹீரோ படம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் வீரன் திரைப்படம் இதுவரை 2.50 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk எனும் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, முதல் நாள் வீரன் திரைப்படம் 1 கோடியும், இரண்டாம் நாளான இன்று இதுவரை 1.50 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாளை வார விடுமுறை நாள் என்பதால் இப்படம் இரட்டிப்பு வசூலை அள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக வீரன் திரைப்படம் மே மாதமே கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பெரும் பட்ஜெட் படங்களின் வெளியீடு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதாகத் தெரிவிக்கப்பட்டது. 


தொடர்ந்து இப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட்  ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை கவரும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'வீரன்' திரைப்படம் இருக்கும் என முன்னதாக படக்குழு தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய தண்டர் காரன் எனும் பாடல் இணையத்தில் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Kathar Basha Endra Muthuramalingam Review: ’பொண்ணு, மண்ணுக்காக’ நடக்கும் முத்தையாவின் சண்டைக்கதை... காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் எப்படி இருக்கு?