முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்யராஜ், ஆடுகளம் நரேன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விருமன்’ படத்துக்குப் பிறகு மற்றொரு  தென் தமிழ்நாட்டு கதைக்களத்துடன், ‘பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும்’ சண்டை செய்யும் ஊரைப் பற்றிய கதைக்களத்துடனும் முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம்!


கதை


அம்மா, அப்பா, தன்னை அரவணைத்து வளர்த்த மாமா பாக்யராஜ் என அனைவரையும் இழந்து, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனி ஆளாக வளர்த்து வரும் தமிழ்ச்செல்வியை (சித்தி இத்னானி), அவரது முறைப்பையன்களுக்கு திருமணம் செய்து வைத்து சொத்தை அபகரிக்க சொந்த பந்தங்கள் திட்டமிடுகிறார்கள்.


ஆனால் இவர்களது முயற்சிகளுக்கு இடையே யாருக்கும் சம்பந்தமில்லாத 'காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம்' (ஆர்யா) சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து தமிழ்ச்செல்வியின் முறைப்பையன்கள் உள்பட போவோர் வருவோரையெல்லாம் அடித்து துவம்சம் செய்கிறார்.


ஆர்யா யார், எங்கிருந்து வந்தார், அவருக்கும் சித்தி இத்னானிக்குமான உறவு என்ன? ஆர்யாவின் பின்புலம் என்ன என்பதை நீ...ளமான கதையாக சொல்லியிருக்கும் படம் தான் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்!


நடிப்பு




போவோர் வருவோரையெல்லாம் தூக்கிப் போட்டு அடி வெளுக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக ஆர்யா. உடலளவில் நன்றாகப் பொருந்திப் போயிருக்கார், ஆனால் எமோஷனல் காட்சிகளில் வழக்கம்போல் ஏமாற்றுகிறார். பஞ்ச் டயலாக்குகள் பேசும் இடங்களிலும் அவரது டயலாக் டெலிவரி சிரிப்பையே வரவழைக்கிறது. 


நடிகை சித்தி இத்னானியை சுற்றியே கதை சுழலுகிறது.  தாவணி பாவடை அணிந்த வழக்கமான முத்தையா பட ஹீரோயினாக படத்துக்குத் தேவையானதை செய்கிறார். ஆனால் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம்.


தடுக்கி விழுந்தால் சண்டை நடக்கும் முதல் பாதியைக் கடந்து, இரண்டாம் பாதியில் ரகளையாக அறிமுகமாகி, படத்துடன் நம்மை ஒன்ற வைத்து வழக்கம்போல் பார்வையாளர்களைக் கவர்கிறார் நடிகர் பிரபு. காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கமாக நடித்துள்ள பிரபு இஸ்லாமிய சமூகத்து தலைவராக கம்பீரமாக வலம் வருவது, தன் பெண்ணுக்காக ஆடுகளம் நரேனின் காலில் விழச் செல்வது என சிவாஜி கணேசனை நியாகப்படுத்தி தன் நடிப்பால் வழக்கம்போல் ஸ்கோர் செய்கிறார். 


இயக்குநர் தமிழ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முரட்டு வில்லன்களாக கச்சிதமாக வலம் வந்து தம்ஸ் அப் பெறுகின்றனர். பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், தீபா, ரேணுகா, மாஸ்டர் மகேந்திரன் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்துக்குத் தேவையானதை செய்து செல்கின்றனர்.


திணறும் முதல் பாதி






முதல் பாதியில் தன்னை கொஞ்சம் முறைத்தாலோ, உம் என்று சொன்னாலோ வேட்டியைக் கழற்றி வீசி ஒரு பத்து பேரை தூக்கிப் போட்டு அசால்ட்டாக ஆர்யா அடித்து நொறுக்கிக்கொண்டே இருப்பது கொட்டாவியையே வரவழைக்கிறது.  ஆர்யா யார், எங்கிருந்து வந்துள்ளார் என்பதையே விளக்காமல், சித்தி இத்னானியின் பாதுகாவலராக ஆர்யாவை சுற்றவிட்டு முதல் பாதியைக் கடத்துவது அயற்சி!


வழக்கத்துக்கு மாறாக இரண்டாம் பாதியில் தான் படத்தின் கதை சூடுபிடிக்கிறது.  ஃபிளாஷ்பேக் காட்சிகளில் சுவாரஸ்யமாக்கி, அதன் பின் திரைக்கதை மீண்டும் சோர்வடைகிறது.  இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார சர்ச்சைகளைக் கிளப்பும் படங்களுக்கு மத்தியில், இராமநாதபுரம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள்  - நாயகனின் சமூகத்து மக்களிடையே உள்ள பிணைப்பைப் படத்தில் முத்தையா பொறுப்புடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களில் புதுமை எதுவும் இல்லை. பின்னணி இசை ஓகே ரகம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. சலிப்பு தட்டும் முதல் பாதியை விறுவிறுப்பாக்கி, இரண்டாம் பாதியைப் போலவே கொடுத்திருந்தால் தரமான ஆக்‌ஷன் மசாலாவாக காதர்பாட்சா  என்ற முத்துராமலிங்கம் கெத்து நடைபோட்டிருக்கும்!