நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான வி3 திரைப்படம் புதுடெல்லி திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. 


கடந்த ஜனவரி மாதம் அமுதவாணன் இயக்கத்தில் வி3 படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஆடுகளம் நரேன், பாவனா, எஸ்தர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 5 நபர்களால் பாலொயல் வன்கொடுமைக்கு ஆளாகி பாவனா கொல்லப்படுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை சொல்ல, இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்து விசாரிக்கிறது.


 இந்த விசாரணைக்குழுவின் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வருகிறார். கடைசியில் உண்மையான குற்றவாளிகள் பிடிபட்டார்களா? இல்லையா? என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 


தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள் மற்றும் நீதி தேடுவதில் உயிர் பிழைத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி பேசியிருந்தது. இதனிடையே சமீபத்தில் நடந்த “புது டெல்லி திரைப்பட திருவிழா”வில் சிறந்த திரைப்படத்திற்கான விருது வி3 படத்துக்கு கிடைத்துள்ளது. வி3 என்பது விந்தியா(பாவனா), விக்டிம் வெர்டிக்ட் என்பதை குறிப்பதாகும். 


இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பாவனா ஆகிய இருவரும் நிறைவான நடிப்பை வழங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு எழுந்தது. வி3 படத்திற்கு ஆலன் சபாஸ்டின் இசையமைத்திருந்தார். சிவா பிரபு ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை முழுமையான தீர்வாகாது என்பதை ஒன்லைனராக கொண்டு இப்படத்தை எடுத்த இயக்குநர் அமுதவாணன் முயற்சி பாராட்டை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.