வணங்கான் படத்தில் மொத்த பாடல்களையும் இயக்குநர் பாலா எழுத சொல்லியதாக கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா.இவர் சமூகத்தின் நிலையை தனது படங்களில் பிரதிபலித்ததால் தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குநர் என பாராட்டப்பட்டவர். பாலுமகேந்திரா திரைப்படத்தில் தயாரிப்பு உதவியாளராகவும், பின்னர் உதவி இயக்குநராகவும் பாலா பணிபுரிந்தார். இதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த சேது படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கான முகவரியாக இன்றளவும் உள்ளது. 


சேது படம்  சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற நிலையில் தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி,தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.  முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாகவும்,  நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிப்பதாக இருந்தது. சூர்யாவின் 2டி நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.


ஆனால் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நடிகர் சூர்யா கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வணங்கான் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் எப்படியாவது வணங்கான் படப்பிடிப்பை நடத்த பாலா தீவிரம் காட்டினார். அதன்படி ஹீரோயினாக அருண் விஜய்யும், ஹீரோயினாக ரோஷினி பிரகாஷூம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். கன்னியாகுமரியில் முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்தது. 


இதற்கிடையில் வழக்கம்போல பாலா படப்பிடிப்பில் சர்ச்சைகளும் வெடித்தது. துணை நடிகை லிண்டா என்பவரை வணங்கான் படத்தில் நடிக்க வைக்க கேரளாவில் இருந்து அழைத்து வந்த நிலையில் சம்பளம் கொடுக்காமல் தாக்கியதாகவும், இதனால் அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்களும் நிகழ்ந்தது. 


இந்நிலையில் வணங்கான் படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதவுள்ளார். இதனை குறிப்பிட்டு வைரமுத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 


”பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய்


உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் கைவிடாது கலை


ஐந்து பாட்டிலும் ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்


தீராத கங்குகளால் பழுத்துக்கிடக்கிறது என் பட்டறை


தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன் போய் வா!” என தெரிவித்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் தான் முதல்முதலாக வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். அந்த பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து வர்மா படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தார். தற்போது மீண்டும் வணங்கான் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.