நடிகைகளை வர்ணிப்பது தமிழ் சினிமாவில் புதிதல்ல. ஒவ்வொருவரையும் ஒரு அழகோடு வர்ணிப்பதும்,
காலந்தொட்டே தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. கண்ணழகி, காதழகி, வாயழகி, , ஏன்.... பல்லழிகள் 
கூட வந்து சென்றிருக்கிறார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி வந்து சென்றவர்கள், வாழ்ந்து 
கொண்டிருப்பவர்கள் மத்தியில் 90களில் புயலாய் சுழன்று கண்ணழகி, காலழகி, வாயழகி என அத்தனை 
அழகி பட்டங்களையும் ரசிகர்களிடம் தட்டப்பறித்தவர் ரம்பா. ‛சார்... ரம்பா... ஸ்வீடு சாப்பிடுது சார்...’ 
என்று ஏங்கும் அளவிற்கு எல்லாம் ரம்பா மயமாய் இருந்த காலம் அது.




ஆந்திரா மிளகாய் தமிழக தக்காளியாக மாறிய ஆண்டு 1993. தக்காளியை விளைவித்தது, வேறு யாரு ‛உழவன்’ தான். தக்காளிக்கு விலை இல்லாத காலம் போல அது, அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து தக்காளி பப்பாளியாய் ரிட்டன் ஆனது. 1996ல் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தரபுருஷன், சிவசக்தி, செங்கோட்டை என எல்லாம் ரம்பா மயம். அதிலும் உள்ளத்தை அள்ளித்தாவில் காலுக்கு அடியில் காற்றாடியை வைத்து மனதை பறக்க வைத்த ‛அழகிய லைலா...’ இவள் தானோ என ஏங்கின 90's கிட்ஸ். உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தவள்... 97யும் விடவில்லை.


பில் கிளிண்டன் வைத்த கோரிக்கையும் காத்திருந்த எஸ்.பி.பி.,யும்!


தர்மசக்கரம், அடிமை சங்கிலி, அப்புறம் சூப்பர் ஸ்டாருடன் அருணாச்சலம், லக்கி ஸ்டார்(அப்போ அது தான் பட்டம்) அஜித் உடன் ராசி, ஜானகி ராமன் என ரவுண்ட் கட்டி அடித்தார். 96ல் உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்த லைலா, 97 ல் அள்ளி அள்ளி அனார்கலி...யாக மாறினர். இனி ரம்பா இல்லாத படமில்லை என்றானது.  அமெரிக்க மாப்பிள்ளை வேடங்கள் வேண்டாம்... ஹீரோ மட்டும் தான் என்றில்லாமல், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பந்தாடினார் ரம்பா. 




96ல் லைலா... 97 ல் அனர்காலி... அப்போ 98 ல் என்ன என்று தானே கேட்கிறீர்கள்...? மரியா! அதாங்க... ‛ஓ... மரியா... ஓ... மரியா’ கடலுக்கு பிஸ்சிங் நெட்டு... காதலுக்கு இண்டர்நெட்டுனு அதகளம் பண்ணாரே, அதே மரியா தான். நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, உனக்காக எல்லாம் உனக்காக, மின்சாரக்கண்ணா, சுயம்பரம் என ஊதாப்பூ பூக்காத இடமில்லை. தமிழ் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, மலையாளம் என மாற்றான் தோட்டத்திலும் மல்லிகை பூ மலந்து கொண்டே தான் இருந்தது. இருந்தாலும் தமிழில் பிரதானமாக ‛மல்லிகையே மல்லிகையே... மாலையிடும் மன்னவன் யார் சொல்லு’ என்றும் பாடிக்கொண்டிருந்தது. ஒருவழியாக மல்லிகை மாலையிட்டு விடைபெற்றாலும், ‛மானாட மயிலாட...’ காட்சியளித்த ரம்பா... இன்றும்
2K கிட்ஸ்களின் பேவரிட் தான்.




1974 ஜூன் 5 ம் நாளான இதே நாளில் பிறந்தவர் தான் விஜயலட்சுமி என்கிற ரம்பா! இன்று அவருக்கு 47 வது வயது. ‛வேர்க்க வைத்தாய் நீ தான்... நீ தான்... விசிறி விட்டாய் நீ தான் நீ தான்...’ என, இன்றும் ரம்பாவை கனவுக் கன்னியாக பாவிக்கும் 90's கிட்ஸ்களுக்கு தானே தெரியும். இதை கேட்டதும், ‛சார் ரம்பா ஸ்வீட் சாப்பிடுது சார்...’ என, மீண்டும் அவர்கள் ஆரம்பிப்பார்கள்,  ‛யோவ்... இன்னைக்கு அந்தம்மா பிறந்தநாள்ய்யா.. ஸ்வீட் சாப்பிடத்தான் செய்வாங்க...’ என, வழக்கம் போல 90's கிட்ஸ்களை வெறுப்பேற்றி, ரம்பாவுக்கு தெம்பா வாழ்த்து சொல்வோம்!


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!