தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர். அவரின் ஒவ்வொரு ரிலீசுக்கும் மக்களிடம் தாறுமாறான எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் ஒரு காலத்தில் ஏப்ரல் மாதம் என்றாலே விஜய் நடித்த படங்கள் வெளியாகும். இதற்கு பின்னர் எந்த ஒரு காரணமும் இல்லை என்றாலும் அது தற்செயலாக நடந்து வந்தது. அப்படி ஏப்ரல் 12ம் தேதியில் வெளியான விஜய் படங்கள் குறித்து நாம் இங்கே பார்க்கலாம்.





மாண்புமிகு மாணவன் (1996) :

விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதை நிலைநிறுத்திய திரைப்படம் மாண்புமிகு மாணவன். நண்பர்களுக்காக எதையும் செய்யும் துணிச்சலான ஒரு இளைஞனாக மிகவும் தைரியமாக தனது நண்பனை  அவனது காதலியுடன் சேர்த்து வைக்கிறான். ஒரு அரசியல்வாதியின் மகனால் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதால் அதை எதிர்த்து அந்த பெண்ணுக்காக நியாயம் கேட்கும் ஒரு துணிச்சலான மாணவனாக பட்டையை கிளப்பி இருந்தார் நடிகர் விஜய். 50 நாட்களையும் கடந்து இப்படம் திரையரங்குகளில் ஓடி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

பத்ரி (2001) :

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஒரு வெற்றிப்படம் 'பத்ரி'. பணத்திற்காக தன்னுடன் டேட்டிங் செய்யும் ஒரு பெண்ணை உயிருக்கு  உயிராக காதலிக்கிறார் நடிகர் விஜய். ஆனால் சிறு வயது முதல் தோழியாக இருக்கும் நடிகை பூமிகா, விஜய்யை ஒரு தலையாக   உயிருக்கு உயிராக நேசிக்கிறார். என்னைப்போல யாராலும் அவனை அந்த அளவிற்கு நேசிக்க முடியாது என விடாப்பிடியாக விஜய் மீது வெறித்தனமாக அன்பை வைக்கிறார். போலியான காதலியால் ஏமாற்றமடையும் விஜய் பின்னர் பூமிகாவின் காதலை ஏற்றுக்கொள்கிறார். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 12ம் தேதி 2001ல் வெளியான இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது.



தமிழன் (2002 ) :

சட்டத்தை மதிக்கும் நேர்மையான ஒரு வழக்கறிஞராக நடித்திருந்தார் நடிகர் விஜய். நீதிக்காக போராடுவதால் தனது சொந்த பந்தங்களை  இழக்கும் விஜய் விடாமல் நீதிக்காக போராடுகிறார். ஏப்ரல் 12-ஆம் தேதி 2002-ஆம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அவர் நடித்த ஒரே தமிழ் படம் இதுவே.    

இப்படி ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியான விஜய் படங்கள் குறித்து பார்த்தோம். இது தவிர 1998ல் நினைத்தேன் வந்தாய், 2004ல் கில்லி, 2005ல் சச்சின், 2010ல் சுறா, 2016ல் தெறி உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதத்தில் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எந்த விஜய் படமும் வெளியாகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. ஆனாலும், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.