தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

2007-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அடுத்தடுத்து அவர் இயக்கிய ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. தேசிய விருதுகளை குவித்த இயக்குநர் என தமிழ் சினிமாவே இவரை கொண்டாடுகிறது.




இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் கண்டிப்பானவர், தனக்கு வேண்டியது கிடைக்கும் வரை அதை நடிகர்களிடம் இருந்து வெளிக்கொண்டுவரும் வரை திருப்தி அடையாத ஒரு கறாரான பேர்வழி என்பது அவருடன் பணியாற்றிய அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஆனால் மனுஷன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் அல்ல காதலியிடமும் கறாரானவர்தான் என்பதை அவரது மனைவியே கூறிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் வெற்றிமாறன் தனது காதலி ஆர்த்தியை எட்டு ஆண்டுகளுக்கு பிறகே கரம் பிடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் வெற்றிமாறனின் மனைவி அவர்களின் காதல் கதையை பற்றியும் அவர்களுக்கு திருமணமான நிகழ்வு குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருந்தார். ஒரு தேநீர் கடையில்தான் இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வெற்றிமாறனுக்கு ஆர்த்தியை கண்டதும் காதல் ஏற்பட்டாலும் அதை சற்றும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்துள்ளார். ஆர்த்திக்கும் வெற்றிமாறனை பிடித்துப்போகவே ஒரு சில நாட்களுக்கு பிறகு அவராகவே வந்து காதலை வெற்றிமாறனிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு வெற்றிமாறன் கொடுத்த பதில் என்ன தெரியுமா? உனக்கு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் நீ 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.



மனைவி ஆர்த்தியுடன் வெற்றிமாறன்



இந்த டீலுக்கு ஒகே என ஆர்த்தி சொன்னாலும் அதற்கு பிறகும் ட்விஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார் வெற்றிமாறன். ”ஒரு வேளை ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இத்தனை ஆண்டுகள் என்னால் காத்திருக்க இயலாது என்றால் நீ தாராளமாக வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம்” என்றுள்ளார். இதற்கு எல்லாம் முதலில் சம்மதம் தெரிவித்த ஆர்த்தி, அவர் சொல்வதுபோல அத்தனை ஆண்டுகள் எல்லாம் ஆகாது. இரண்டு, மூன்று ஆண்டுகளில் வெற்றிமாறன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என நம்பியுள்ளார்.

அந்த சமயத்தில் ஆர்த்திக்கு வெளியூரில் வேலை கிடைக்கவே, ஆர்த்தி நான் வெளியூருக்கு எல்லாம் போக முடியாது என நிராகரித்துள்ளார். அந்த சமயத்தில் வெற்றிமாறன் ஒன்றை கூறியுள்ளார். நான் உன்னுடைய வேலையில் தலையிடமாட்டேன். அதே போல நீயும் தலையிடக்கூடாது. அப்படி நமது இருவரின் கனவையும் இந்த காதல் பிரிக்கும் என்றால் அப்படிப்பட்ட காதலே நமக்கு தேவையில்லை என வெற்றிமாறன் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். உடனே ஆர்த்தி அந்த வேலையில் போய் சேர்ந்து இன்று அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜராக வளர்ச்சியடைந்துள்ளார். வெற்றிமாறன் மனைவி கூறிய இந்த கதையை கேட்டால் வெற்றிமாறன் எப்படி நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக இருந்துள்ளார் என்பது புரிகிறது.