டாஸ்மாக் ஊழலில் ஆகாஷ் பாஸ்கரன்
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக திரைப்படம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அலுவலகம் மற்றும் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தபட்டவர்கள் ஒருங்கிணைத்த பார்ட்டியில் திரைப்பட நடிகைகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பல லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன என பல தகவல்களும் கூறப்படுகின்றன. ஆனால் இந்த குற்றசாட்டுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை
இந்த சோதனையில் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் அலுவகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ் ரமேஷ் மற்றும் வி லட்சுமி நாராயணன் இருவர் முன் விசாரணைக்கு வந்தது.
ஆகாஷ் பாஸ்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். டாஸ்மாக் ஊழலுக்கு ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் ஆகாஷ் பாஸ்கரனின் செல்ஃபோன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்தவும் , ஆவணங்களை கைப்பற்ற மட்டுமே உரிமை உள்ளது, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் எதன் அடிப்படையில் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர் , வீடு பூட்டியிருந்தால் காவல் துறையின் உதவியோ பூட்டை உடைத்து சோதனை நடத்தாமல் சீல் வைத்தது ஏன் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன் பின் விசாரணை இன்று ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு
இந்த வழக்கு இன்று ஜூன் 17 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் டாஸ்மாக் ஊழலில் தொடர்பு இருப்பது தொடர்பான ஆவணங்களை நாளை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் படங்கள்
ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான டான் பிக்ச்சர்ஸ் தற்போது பல பெரிய படஜெட் படங்களை தயாரித்து வருகிறது. சுதா கொங்காரா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை , அதர்வா நடிக்கும் இதயம் முரளி , சிம்பு நடிக்க இருக்கும் எஸ்.டி.ஆர் 49 ஆகிய படங்களை டான் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது.