பூந்தமல்லியில் அதிநவீன வசதியுடன் கூடிய சினிமா நகரம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சென்னை அடுத்த பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக கடந்த ஜனவரி 7 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்தப்பட்டது.


இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.அந்த வகையில் பூந்தமல்லியில் ரூ.540 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இதில் வி,எஃப்.எக்ஸ், அனிமேஷன், புரொடக்‌ஷன் பணிகள், 5 ஸ்டார் ஹோட்டல் என சகல வசதிகளும் செய்யப்படும். மேலும் ரூ.25 கோடி மதிப்பில் 4 படப்பிடிப்பு தளங்களுடன் எம்ஜிஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானதும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அதில், “தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழ் நாட்டில் இல்லாத காரணத்தினால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய் விடுகிறது. இதனை கட்டுப்படுத்த பல தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு.என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள், அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஹைதராபாத் நகரில் உள்ளது போல தமிழ்நாட்டிலும் ஒரு சினிமா நகரம் வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள்.


அந்த கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே ரூ.500 கோடி பட்ஜெட்டில் புதிய சினிமா நகரம் அமையும் அதில் அனைத்து தொழில்நுட்ப வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள் இருக்கும் என்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்கள். அதற்கு தமிழ் திரையுலகம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும், எங்களது கோரிக்கையை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு மு. பெ.சாமிநாதன் அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரையுலகின் சார்பாக எங்களது நன்றியினை இரு கரம் குவித்து தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது