லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் மம்மூட்டி நடித்த முத்ரா படத்தை பார்த்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.


மாஸ்டர்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் மாஸ்டர். மாநகரம்,கைதி படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் இப்படத்தில் முதன்முறையாக இணைந்தார் லோகேஷ். மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் இப்படத்தில் நடித்தனர். ஆண்ட்ரியா, சாந்தனு, நாஸர், அர்ஜூன் தாஸ்  உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். லோகேஷ் கனகராஜின் பார்வையில் விஜய்யை ரசிகர்களுக்கு புதுமையாகவும் அதே நேரத்தில் விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற வகையிலும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. 


லோகேஷ் கனகராஜ் மீது விமர்சனங்கள்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்தின் மீது வரும் விமர்சனங்களை தான் உள்வாங்கி அடுத்த முறை கவனமாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். போதுமான காலம் இல்லாததால் படத்தை தான் நினைத்த மாதிரி எடுக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர்  படத்தை வைத்து புதிய சர்ச்சை ஒன்று சமூக வலைதளத்தில் கிளம்பியுள்ளது. 






மலையாளத்தில் 1989ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான முத்ரா படத்தின் கதையை அப்படியே மாஸ்டர் படத்தை படமாக எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். முத்ரா படத்தில் போலீஸாக இருக்கும் மம்மூட்டி, ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறார். அங்கு இருக்கும் சிறுவர்களை நல்வழிப்படுத்த பல முயற்சிகளை எடுக்கிறார். தனது கடத்தல் வேலைகளுக்காக இந்த சிறுவர்களை பயன்படுத்தி வருகிறான் வில்லன்.


இப்படி மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கும் கதை அப்படியே முத்ரா படத்துடன் ஒத்துப் போகிறது. இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் எடுக்க மம்மூட்டியின் முத்ரா படம் ஒரு தூண்டுகோலாக இருந்ததா என்று அவர் தான் விளக்கமளிக்க வேண்டும்.


தலைவர் 171


சன் பிச்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.  இப்படத்திற்கான திரைக்கதையை தற்போது அவர் எழுதி வருவதாகத் தெரிவித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.