`பெண்கள் கார்டியோ உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். பலுதூக்குதல் என்பது ஆண்களுக்கானது’, `உடல் வலிமையை அதிகப்படுத்தினால் நீ பெண் போல தோற்றம் அளிக்கமாட்டாய்’ என பெண்களின் உடல் வலிமை மீதான சமூக கண்ணோட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனைக் கடுமையாக எதிர்க்கிறார் நடிகை டாப்சி பன்னு. 


`பெண்களின் உடற்பயிற்சி முறைகள் மீது சமூகத்திற்கு பிற்போக்கான கண்ணோட்டங்கள் உண்டு. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பெண்கள் தசைகளை வலுப்படுத்தக் கூடாது எனச் சட்டம் இயற்றியவர்கள் யார்? நாம் அனைவரும் கேள்விப்பட்ட இதனைப் பெரிய பொய்யாக கருதுகிறேன். என் வாழ்க்கையில் நான் உடற்பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கிய காலத்தில், எனக்கும் `கார்டியோ பயிற்சிகள் மட்டும் செய். பலு தூக்குதல் முதலானவற்றைச் செய்ய வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டது. அப்போது எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாததாலும், அப்போதைய காலகட்டத்தில் இன்று இருப்பது போல திறந்த மனம் கொள்ளாததாலும் அந்த முட்டாள்தனமான அறிவுரையை நான் ஏற்றுக் கொண்டேன். எனினும் காலப் போக்கில், அது மிகவும் மோசமான கருத்து என்று உணர்கிறேன்’ என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். 



தசைகளை வலுவாகக் கொண்டிருக்கிறார் என்பதற்காக ஒரு பெண்ணை உருவக் கேலி செய்வது முற்றிலும் தவறானது எனவும் நடிகை டாப்சி கூறியுள்ளார். `ஏன் ஒரு வகையான உடல் மீது மக்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள்? வெறும் தசைகளை வலுப்படுத்துவதால் ஓர் பெண்ணின் உடல் ஆணின் உடலாக மாறாது. அது பெண்ணின் உடலாகவே நீடிக்கும். அதனால் இவ்வாறான கண்ணோட்டத்தை நான் எதிர்க்கிறேன். நான் இந்தக் கண்ணோட்டம் நீங்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அதிக வலுவுள்ள தசைகளைக் கொண்டிருப்பது வெறும் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல’ எனவும் நடிகை டாப்சி குறிப்பிட்டுள்ளார். 


Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான `ரஷ்மி ராக்கெட்’ படத்திற்கான தனது உருவ அமைப்பை டாப்சி மாற்றிய போது, அவரைச் சமூக வலைத்தளங்களில் சிலர் ட்ரோல் செய்து, அவரையும் உருவக் கேலிக்கு உட்படுத்தினர். இந்தப் படத்தில் டாப்சி, பாலியல் பரிசோதனை செய்யப்படும் ஓட்டப் பந்தய வீராங்கனையாக நடித்துள்ளார். அவரது உடலமைப்பு ஆண்களைப் போல இருப்பதாகக் கூறப்பட்டு, டாப்சி கேலி செய்யப்பட்டார். 



இதுகுறித்து தொடர்ந்து பேசிய நடிகை டாப்சி, `நான் பிகினி அணிந்திருந்த படத்தைப் பதிவிட்டிருந்தால் பலரும் அதனை ரசித்துக் கொண்டிருப்பார்கள். 'Whatta body', 'so hot' என்று பல கமெண்ட்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் என்னைப் பொருத்த வரையில், கடுமையான உடற்பயிற்சி செய்யும் உடல்கள் பாராட்டுகளுக்கு உரியவை. ஒருவர் தனது உடல் மீது அதிக உழைப்பைச் செலுத்து, பயிற்சி மேற்கொண்டால், அவரை நான் பாராட்டுவேன். அப்படி உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, சில தசைகள் வலுப்பெறும். மெலிதாக இருக்க கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களை விட, உடற்பயிற்சி செய்து தங்கள் உடலை வலுப்பெறச் செய்பவர்களை நான் அதிகம் பாராட்ட விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.