திருடும்போது பிடிபட்டதால் சுருதியும், ப்ரியங்காவும் நிரூப் இருக்கும் பாதாள அறைக்கே போனார்கள். ப்ரியங்கா ராஜுவிடமும், இமானிடமும் போட்டுவாங்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்படியே சந்திரமுகியாக மாறி இசையிடம் இருந்ததை திருடிவிட்டதைப்போல பாத்ரூமில் போய் ஆடிக்கொண்டிருந்தார்.


பாவனி, அக்‌ஷராவிடம் எல்லாவற்றையும் நேரில் பேசும் ஜெண்டில் உமன் என தன்னைச் சொல்லிக்கொண்டார். அக்‌ஷரா இனிமே நீ என்கிட்ட பேசாதீங்க. பின்னாடியும் பேசாதீங்க என்றார். அக்‌ஷரா பாவனியைப் பற்றி பேசினாரா இல்லையா என்பது அவருக்குத்தான் தெரியும். பேசிக்கா நான் அவளைப் பத்தி பேசல என ராஜுவிடம் சொன்னார் அக்‌ஷரா. அது என்ன பேசிக்கா என நமக்கும் புரியவில்லை. அது எல்லாம் தாண்டி, மொத்த நாணய டாஸ்க்குமே கொஞ்சம் புரியாமல்தான் இருக்கிறது. எடிட்டரே குழம்பிவிட்டார் போலத் தோன்றுகிறது.


உவாக் ரகத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் ப்ரியங்கா சின்னப்பொண்ணுவை பாத்ரூமுக்கு அழைத்துச்சென்று செக் பண்ணிக்கொண்டிருந்தார். கூடவே அக்‌ஷராவும் போய் சும்மாதான் அப்படி பண்றாங்க.. அவங்கதான் வெச்சிருப்பாங்க என சின்னப்பொண்ணுவிடம் இளித்துக்கொண்டிருந்தார். 


ராஜு எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். அக்‌ஷராவுக்கான நாணயத்தை ராஜுதான் ஒளித்துவைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு ப்ரியங்காவும், பாவனியும் சுற்றிச்சுற்றி வந்தார்கள். நாங்க உண்மைக்கு குரல் கொடுத்தோம். இப்போ நாங்க நாமினேஷன்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். நீ ஒய்யாரமாதான ஒக்காந்திருக்க. நிரூப்பும் நல்லாத்தான இருக்கான் என ராஜுவைப் பார்த்து பொருமிக்கொண்டிருந்தார் அபிஷேக்.


யாருக்கும் யாருக்கும் சண்டையில்லை என கண்டுபிடிப்பதுதான் இப்போது பெரும் பிரச்சனை. பாவனி அபினயைப் பற்றி, வருணிடமும், அக்‌ஷராவிடமும் கழுவிக் கவிழ்த்துவிட்டார். அக்‌ஷராவைப் பற்றியும், வருணைப் பற்றியும் தவறாகச் சொன்னான் அபினய் என்றார். முதல் சீசனில் பாண்டி எகிறிக்குதித்து ஓட முயற்சி செய்ததைப்போல அக்‌ஷரா ஓடிவிடுவார் என எதிர்பார்க்கலாம். வீட்டுக்குப் போகணும் என அழுதுகொண்டே இருக்கிறார்.


நிரூப் பாவனியிடமும், தாமரையிடமும் ஐந்து ஐந்து நிமிடங்கள் கடன் வாங்கி தன்னுடையதுதான் நாணயம் என உரிமைபெற்றுக்கொண்டார். இமான், தாமரையை உஷார்படுத்திக் கொண்டிருந்தார்.