கடந்த அக்டோபர் 18 அன்று, ஆப்பிள் நிறுவனம் நடத்திய நிகழ்வில் புதிதாக ஒரு தயாரிப்பை வெளியிட்டுள்ளது. Polishing cloth என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் துணியே இந்தத் தயாரிப்பு. மிருதுவான, சிராய்ப்புகளை ஏற்படுத்தாத பொருள்களால் இந்தத் துணி உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் துணி ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. எனினும் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 1900 ரூபாய்.
ஆப்பிள் வெளியிட்டிருக்கும் பாலிஷிங் துணியின் ஓரத்தில் இந்நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருக்கிறது. எனினும், பிற மைக்ரோஃபைபர் துணிகளுக்கும், ஆப்பிள் வெளியிட்டிருக்கும் துணிக்கும் என்ன வித்தியாசம் என்பதும், இதன் விலை ஏன் இவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
உதாரணமாக, அமேசான் தளத்தில் கேட்ஜெட்களைச் சுத்தம் செய்யும் மைக்ரோஃபைபர் துணிகளின் அதிகபட்ச விலையே சுமார் 1.50 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தத் துணியின் மதிப்பு சுமார் 19 அமெரிக்க டாலர்கள். இதன்மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் துணி தான் சந்தையில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மைக்ரோஃபைபர் துணியாக இருந்து வருகிறது.
எந்த ஆப்பிள் கேட்ஜெட்களின் டிஸ்ப்ளேவையும் பாதுகாப்பாகவும், துப்புரவாகவும் சுத்தம் செய்வதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் இந்தப் பாலிஷிங் துணியைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. iPhone, iPad, MacBook என எந்த ஆப்பிள் தயாரிப்புகளிலும் இந்தத் துணியைப் பயன்படுத்தலாம் என ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட பிறகு, இந்தப் பாலிஷிங் துணிக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தத் துணியை வாங்குவதற்கு சுமார் 3 முதல் 4 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. எனினும் சமூக வலைத்தளங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் இத்தகைய அதிக விலை நிர்ணயம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டது. பலரும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் தயாரிப்பைக் கடுமையாக ட்ரால் செய்து வருகின்றனர்.
தங்கள் தயாரிப்புகளின் விலைகளை அதிக அளவாக நிர்ணயிப்பதும், ஒவ்வொரு புதிய தயாரிப்பின் வெளியீட்டின் போதும் அவற்றின் விலைகளைச் சமூக வலைத்தளங்களில் ட்ரால் செய்வது ஒவ்வொரு முறை ஆப்பிள் நிறுவனம் தங்கள் நிகழ்வுகளை நடத்தும் போதும் வாடிக்கையாகி வருகிறது. சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் என்ற விலையை முதன்முதலில் நிர்ணயித்து, விற்பனை செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்ஃபோன், ஆப்பிள் நிறுவனத்தின் iPhone என்பது குறிப்பிடத்தக்கது. விலை அதிகம் இருந்தாலும், வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன் ஆகியவை அவற்றின் சிறப்பம்சங்களுக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெறும். இந்த முறை, ஆப்பிள் வெளியிட்டிருக்கும் பாலிஷிங் துணி அப்படியான ஆதரவான விமர்சனம் எதையும் பெறவில்லை.