Flood Relief Fund: மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்காக ரூ.5 கோடிக்கான காசோலையை சன் குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறன் வழங்கினார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு:
கடந்த வாரம் சென்னையை கடந்த மிக்ஜாம் புயலால் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகளவில் மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையின் குடியிருப்புகள், அலுவலகங்கள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. வடசென்னையின் சில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அரசு தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளும், நிவாரணன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முன்னதாக வெள்ள நிவாரண நிதிக்காக மத்திய அரசு ரூ.5060 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் முதற்கட்டமாக ரூ.450 கோடியை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியது.
5 கோடி நிதியுதவி:
இதற்கிடையே வெள்ள நிவாரண நிதிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னார்வலர்களும், சில பெரு நிறுவனங்களும் நிதியுதவி செய்து வருகின்றன. அந்த வகையில், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை முகாம் அலுவகத்தில் வைத்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதேபோன்று சன்மார் குழுமத்தின் சார்பில் அதன் நிறுவன தலைவர் விஜய் சங்கர் ரூ.1 கோடிக்கான காசோலையையும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி மற்றும் துரைசாமி ரூ.1 கோடிக்கான காசோலையையும் முதலமைச்சரை சந்தித்து வழங்கினர்.
இவர்கள் மட்டுமில்லாமல், லயன் டேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக முதன் முதலில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர். சூர்யா மற்றும் கார்த்தியை தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் ரூ.1 லட்சம், சின்னத்திரை நடிகர் பாலா ரூ. 3 லட்சம் என முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்தனர்.
இவர்கள் மட்டுமில்லாமல் தொடர்ந்து மதிமுக கட்சி தரப்பில் ரூ.10.20 லட்சமும், திராவிடர் கழகம் சார்பில் ரூ.10 லட்சமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பணம் கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க: Rajinikanth: ரஜினிகாந்தை பார்த்து மெய்மறந்தேன்.. உணர்ச்சிவசப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர்!