உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுமார், 57 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகமும், 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா:
அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலில் 70 ஆயிரம் பேர் வரை ஒரு நேரத்தில் தரிசனம் மேற்கொள்ள வசதிகள செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த திறப்புவிழாவின் போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்களும், 136 மடாதிபதிகளும் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற ராமர் கோவில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திறப்பு விழாவில் பங்குபெற அழைப்புவிடுத்தனர். அதன்படி, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தீவிரம்:
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி குழந்தை ராமர் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான சிறப்பு பூஜைகள் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் திறப்பு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆரின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா, ” அயோத்தியில் ஸ்ரீ சீதாராமா சந்திர சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதன் மூலம் உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு நனவாகியுள்ளது. இதை தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்து ஒட்டுமொத்த நாடும் இதை வரவேற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
பிரம்மாண்ட கோயில்:
சமீபத்தில், கோயிலின் பல்வேறு புகைப்படங்களை அறக்கட்டளை வெளியிட்டிருந்தது. அதில், கோயிலின் உள்புறத்தில் இருக்கும் தூண்கள் காட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களை கொண்டு கோயிலின் தூண்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமர் கோயிலின் வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ராமர் கோயிலின் உள்புறம் எப்படி இருக்கும் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்துடன் வீடியோ காட்சி தொடங்குகிறது. அடுத்த காட்சியில், கட்டிடக்கலைஞர் ஒருவர், கோயில் தூணில் சிற்பம் செதுக்குவது பதிவாகியுள்ளது. கோயிலின் கருவறை, தங்கக் கதவுகள், தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கோவிலின் சுவர்கள் ஆகியவை வீடியோவில் காட்டப்பட்டது.