ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை டிசம்பர் 12ஆம் தேதி தனது 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் 169க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.


தன்னுடைய நடிப்பு மற்றும் ஸ்டைலுக்காக ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்கள் ரஜினியைக் கொண்டாடி வருகிறார்கள், காலத்திற்கு ஏற்ற வகையில் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் கதைகளில் மாற்றங்கள் செய்து இளம் தலைமுறை இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார். சாமானிய மக்கள் தவிர்த்து இந்திய சினிமாவில் பெரும்பாலான  நடிகர்கள் , இயக்குநர்களும் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். ரஜினியை எப்படியாவது ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்கிற ஆசை இல்லாதவர்கள் குறைவுதான். அப்படி ரஜினிகாந்தை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல்.


விக்கி கெளஷல்


மசான் திரைப்படத்தின் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகர் விக்கி கெளஷல், தொடர்ந்து மன்மர்ஸியான், சர்தார் உத்தம் சிங், சாம் பஹாதுர் போன்ற படங்களில் நடித்துள்ள விக்கி கெளஷல் தற்போது ஷாருக் கான் நடித்துள்ள டங்கி படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரஜினியை முதன்முதலில் பார்த்து மெய்மறந்து போன தருணத்தை விவரித்தார் விக்கி கெளஷல்.


பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகரின் பிரபல காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்கி கௌஷலிடம்  “நீங்கள் சமீபத்தில் எந்த ஒரு நடிகரின் ஸ்டார் வேல்யூவைப் பார்த்து வியந்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது உடனடியாக ரஜினிகாந்தின் பெயரை சொன்னார் விக்கி கௌஷல்.






நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா மற்றும் நியூசிலந்திற்கு இடையிலான அரை இறுதிப் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காண வந்திருந்த போது தான் அவரை சந்தித்ததாகவும், அவரைத் பார்த்த அந்தத் தருணத்தில் தான் மெய்மறந்துபோனதாகவும் விக்கி கௌஷல் தெரிவித்துள்ளார். 


தலைவர் 170


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த. செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாம் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா , மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


தலைவர் 171


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சில காட்சிகள் ஐமேக்ஸின் படம்பிடிக்கப்பட இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.