HBD Silambarasan: தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
திரைத்துறையை பொறுத்தவரை நடிப்பு, பாடல், கதை, வசனம், இசை, பின்னணிக்குரல் கொடுப்பது என அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபிப்பவர்கள் வெகு சிலராகவே இருப்பார்கள். அந்த வெகு சிலரில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர் தான் சிலம்பரசன். இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன் தனது சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார்.
டி.ஆர். இயக்கிய உறவை காத்த கிளி படத்தின் மூலம் 2வயது குழந்தையாக திரைத்துறையில் அறிமுகமாக சிலம்பரசன், நடிப்பில் சுட்டியாக இருந்ததுடன், இளம் வயதில் ஸ்டைல் நடிகராக அறியப்பட்டார். அதனால் சிலம்பரசனை ரசிகர்கள் சிலம்பரசன், எஸ்டிஆர், லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமான அழைக்க தொடங்கினர். சிலம்பரசன் நடிப்பு மட்டுமில்லாமல் திரைத்துறை சார்ந்த பிற திறமைகளையும் வளர்த்துக் கொண்டார். தமிழ் சினிமாவின் ஹீரோவாக 2002ம் ஆண்டு வெளிவந்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சிலம்பரசன் அறிமுகமானார். முதல் படம் எதிர்பாராத வெற்றியை தராத போதிலும், அடுத்ததாக தம், குத்து உள்ளிட்ட காதல் படங்களில் நடித்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த வரிசையில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த கோவில் படத்தில் நடித்த சிலம்பரசன், தனக்கான வெற்றியை பெற தொடங்கினார். அதுவரை ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்த சிலம்பரசன், மன்மதன், தொட்டில் ஜெயா, சரவணா உள்ளிட்ட படங்களின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். சிலம்பரசனின் சினிமா கேரியரில் அவருக்கு அதிகளவில் பெயரை பெற்று கொடுத்த படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படம் அவரின் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
மாறுபட்ட கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிய சிலம்பரசன் வானம், ஒஸ்தி, போடா போடி உள்ளிட்ட வேறுவிதமான பரிமாணங்களை கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த சிலம்பரசனுக்கு கம்பேக் கொடுத்தது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, வெளிவந்த பத்து தல படம் அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது சிலம்பரசன் ராஜ்கமல் தயாரிப்பில் STR48 படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிலம்பரசனுக்கு அவரது ரசிகர்களும், திரைத்துறை நண்பர்களும், பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: HBD Simbu: லிட்டில் ஸ்டார் முதல் STR வரை! சிலம்பரசன் கடந்து வந்த பாதை - ரசிக்க தவறாத ரசிகர்கள்