மழலை கொஞ்சும் மொழியிலே 'ஐம் ஏ லிட்டில் ஸ்டார்' என சுட்டித்தனமாக ஒரு குட்டி பையனாக அனைவருக்கும் ஒரு செல்ல மகனாக வலம் வந்த லிட்டில் சூப்பர் ஸ்டார் தான் இன்று STR என கொண்டாடப்படும் மகா கலைஞன் சிம்பு. சினிமாவுக்காகவே பிறந்த இந்த ஸ்டாரின் 41வது பிறந்தநாள் இன்று.
லிட்டில் சூப்பர் ஸ்டார்:
ஆட்டம், பாட்டம், நடிப்பு, துறுதுறுப்பு, சுறுசுறுப்பு, டயலாக் டெலிவரி என இத்தனை சிறிய வயதில் இவ்வளவு ஸ்டைலான குழந்தை நட்சத்திரத்தை தமிழ் சினிமா பார்த்து இருக்குமானால் அது சிலம்பரசனாக மட்டுமே இருக்க முடியும். அப்பாவின் அடையாளத்தோடு 19 வயதில் இளம் நாயகனாக 'காதல் அழிவதில்லை' படம் மூலம் அடியெடுத்து வைத்தாலும் அடுத்தடுத்து அவர் தமிழ் சினிமாவில் நிலைக்க அவரின் திறமை தான் காரணமாக இருந்தது. மெல்ல மெல்ல லிட்டில் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டாராக முன்னேறினார்.
ஒரு சில படங்கள் வெற்றியை தேடி தந்தாலும் ஒன்று இரண்டு சரிவை தான் தந்தது. படம் தோல்வி அடைந்தாலும் சிம்பு ரசிகர்களால் அவரை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு திரையில் தெறிக்க விடும் அளவுக்கு இருக்கும் அவரின் ஸ்கிரீன் பிரசென்ஸ். அது வரையில் மாஸ் ஹீரோவாக இருந்த சிம்புவால் இவ்வளவு சாஃப்ட்டான ஒரு கேரக்டரிலும் கலக்க முடியுமா என்பதை ஒவ்வொரு பிரேமிலும் வந்து நடிப்பால் அசால்ட் செய்த கிளாஸ் ஹீரோ ரேஞ்சில் கொண்டாட வைத்தது 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம்.
பன்முக கலைஞர்:
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டும் என்னை அடக்கி விட முடியாது என நிரூபித்த சிம்பு ஒரு இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன கலைஞர், எழுத்தாளர் என தன்னுடைய பன்முக திறமையால் அனைவரையும் அசர வைத்தார். அப்படி அவர் இயக்கிய மன்மதன் மற்றும் வல்லவன் என இரு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து அவரின் கிராஃப்பை உயர்த்தியது. இதற்கு இடையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார் சிம்பு.
சிகரங்கள் சிரமங்கள் இரண்டையும் மாறி மாறி கடந்து வந்த சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அவரின் ரசிகர்கள் நம்பிக்கையோடு சிம்புவின் பெஸ்ட் கம்பேக்கிற்காக காத்திருந்தனர். அப்படி ஒரு சில ஆண்டுகள் பிரேக்குக்கு பிறகு உடல் எடையை படு சூப்பராக குறைத்து மகா, ஈஸ்வரன் என ரீ என்ட்ரி கொடுத்தார். 'மாநாடு' மிகச்சிறந்த கம்பேக் படமாக அதிரி புதிரி ஹிட் அடித்தது.
வாழ்க்கையில் அவர் எத்தனை பிரச்சினைகளை சந்தித்தாலும் சிம்புவிடம் இருந்து பிரிக்க முடியாத குணம் என்றால் அது வெளிப்படையாக பேசுவது. மனதில் பட்டதை அப்படியே பேச கூடிய அவரின் குணம் தான் அவரின் அசைக்கமுடியாத அடையாளம். 'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கொரோனா குமார் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR 48 படத்திலும் நடிக்க உள்ளார் நடிகர் சிம்பு.
என்றுமே அரசனாக இருக்கும் சிலம்பரசனுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் பெற்று ரசிகர்களை அவர் ஊக்கப்படுத்த வேண்டும் என்பது இந்த பிறந்தநாளுக்கு அவரின் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.