Maveeran: மாவீரன் படம் ஏழை, எளிய மக்களின் குரலின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


மாவீரன் படம்:


தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. பிரின்ஸ் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தையும் தயாரித்துள்ளது. ஜூலை 16ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸான மாவீரன் படத்தை, ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். 


இந்த படத்தின் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி கமர்ஷியலாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக யோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு பெருமளவில் உதவியுள்ளது. 


பாராட்டிய திருமாவளவன்:


இந்நிலையில், மாவீரம் திரைப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மாவீரன் திரைப்படம் வித்தியாசமான கதைகளமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்த திரைக்கதை மிகச் சிறப்பாக இயக்கப்பட்டு இருக்கிறது. பல்லாயிர கணக்கான மக்கள் சென்னையின் மையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சென்னையின் புறநகர்  பகுதிகளில் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். காலம் காலமாக குடியிருந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்படும்போது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறபோது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது சித்தரிக்கும் வகையில் மாவீரம் படம் விளங்குகிறது” என்றார்.  


மேலும், ”இயக்குநர் தன்னுடைய கற்பனை திறனை மூலதனமாக வைத்து மிக  சிறப்பாக தொடக்கத்தில் இருந்து கடைசி வரையில் விறுவிறுப்பாக கதையை சொல்லி இரூக்கிறார்.  நடிகர் சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். கதாநாயகன் ஆளுமை மிக்கவராக திரைப்படங்களில் காட்டப்படும். ஆனால் இதில் கதாநாயகன் பயந்த சுபாத்துடன் நடித்திருப்பது எதார்த்தமாக இருக்கிறது. அதே போன்று நடிகர் அதிதி ஷங்கர் அவரது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புகழ்பெற்ற நடிகை சரிதா நடித்திருப்பது இந்த படத்திற்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது.


இந்த படத்தை நான் பார்த்தபோது சில காட்சிகள் என்னை கண்கலங்க வைத்தது. இந்த படம் ஏழை, எளிய மக்களின் குரலின் பிரதிபலிப்பாக இருக்கிறது. சென்னையில் பல இடங்களில் அரசு கட்டிடங்கள் எப்பொழுதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த படம் இயக்கப்பட்டுள்ளதாக” திருமாவளவன் கூறினார்.




மேலும் படிக்க 


Web series: அடடடா ! அதிரடி முடிவு எடுத்த மத்திய அரசு... இனி ஓடிடி இணைய தொடர்களுக்கும் விருதுகள்!