திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், திரைப்படங்கள், தொழில்நுட்ப கலைஞர் என பல பிரிவுகளின் கீழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக சிறந்த ஆவணப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அந்த வரிசையில் இணைந்துள்ளது இணைய தொடர்கள். 


திரை ரசிகர்கள் மத்தியில் இணைய தொடர்கள் சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதற்கு அடிக்ட்காகவே மாறிவருகிறார்கள். தமிழ் மொழி இணைய தொடர்களை மட்டுமின்றி சர்வதேச அளவில் ஒளிபரப்பாகும் இணைய தொடர்கள் வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. எனவே சிறந்து விளங்கும் இணைய தொடர்களை கௌரவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலரின் கோரிக்கைகளின் அடிப்படையில் சிறந்த இணைய தொடருக்கு விருது வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதால் நடப்பாண்டு முதல் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கு விருது வழங்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 


 



54வது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இந்த நடப்பாண்டு முதல் சிறந்த இணைய தொடருக்கு விருந்து வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்.


மேலும் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டு, ஓடிடியில் வெளியான இணைய தொடர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி தளத்தை மேம்படுத்தவும் அதன் மூலம் பல புதியவர்களின் திறமையை ஊக்குவிப்பதற்காக தான் மத்திய அரசு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. 


இந்த இந்திய சர்வதேச திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இணைய தொடர்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10. மேலும் இது குறித்த தகவல்கள் அறிய அதற்கான அதிகாரபூர்வமான இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.