மணிப்பூரில் குகி சோ பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. ஊர்வாலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண்கள், பின்னர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


நாட்டை உலுக்கிய சம்பவம்:


இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என எதிர்க்கட்சிகள் தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றன. இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்னை பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரையில், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்காத என கூறப்படுகிறது. இச்சூழலில், மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வீடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கும் அரசின் செயலற்ற தன்மைக்கும் கடுமையாகக் கண்டனங்களை தெரிவித்தன.


கொந்தளிக்கபோகும் நாடாளுமன்றம்:


இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சரிடம் பேசியுள்ளாக கூறினார். கடந்த மே 3ஆம் தேதி முதல் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு பிரதமர் மோடியே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 


மனதை பதற வைக்கும் வகையில் வீடியோ உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பிரிங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களில் மத்திய அரசும், பிரதமரும் கண்மூடி இருப்பது ஏன்? இதுதொடர்பான படங்களும் வன்முறை சம்பவங்களும் அவர்களை உலுக்கவில்லையா?" என குறிப்பிட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்டு 11ஆம் தேதி நிறைவடைகிறது. மணிப்பூரின் சமூகக் கட்டமைப்பை அழித்துக் கொண்டிருக்கும் கொடூரமான சோகம் குறித்து விவாதம் நடத்த மோடி அரசு அனுமதிக்குமா? பிரதமர் தனது மௌனத்தை கலைத்து, நல்லிணக்கத்தை நோக்கி செல்லும் பாதையில் நாட்டை நம்பிக்கைக்கு கொண்டு செல்வாரா?" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் மூத்த தலைவருமான டெரெக் ஓ பிரையன் ட்விட்டரில் குறிப்பிடுகையில், "பிரதமர் பேசவில்லை என்றால், அதனால் ஏற்படும் இடையூறுகளுக்கு அவரே பொறுப்பு. உங்களின் மனதின் குரல் போதும், மணிப்பூர் குரலை கேட்பதற்கான நேரம் இது"