முருகதாஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் செல்லும் ஸ்பெஷல் க்ளாஸ்; எதற்காகன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் மிகவும் பரபரப்பான, தவிர்க்கமுடியாத ஹீரோவாகவே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். பொங்கலுக்கு அயலான் படம் ரிலீசான நிலையில், அயலான் படத்தின் வெற்றி அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், உலகநாயகன் கமல்ஹாசனின் ஆ.கே. பிலிம்ஸின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் டைட்டில் அப்டேட் இன்று அதாவது பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் கை கோர்த்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நேற்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளார்.
Just In




தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். ரமணா, தீனா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என வெற்றிப் படங்களை இயக்கிய முருகதாஸ், கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்பார் படம் போதுமான வெற்றியைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் படம் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் முருகதாஸ் மிக நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் ஒரு தரமான கதையை தயார் செய்து அதனை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போகவே, படத்தயாரிப்பு பணிகள் அடுத்தடுத்து வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் படம் குறித்து, முருகதாஸ் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். முருகதாஸ் கொடுத்த அப்டேட் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. அதாவது, இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்தான். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தனித்துவமான உடல் மொழியை வெளிப்படுத்த பயிற்சிப் பட்டறைக்கு சென்று தனியாக பயிற்சி எடுத்துவருகின்றார் என முருகதாஸ் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்து வரும் நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படமும் ஆக்ஷன் படம் என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர்.
மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் எலமன் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர்.