சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தால் பிற படங்கள் மற்றும் சீரியல்களின் ஷூட்டிங் பாதிக்கப்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்படத்தில் கன்னட நடிகை ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் நடித்த ருக்மணி வசந்த் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் ஆக்‌ஷன் பாணியில் உருவாவதாக கூறப்படுகிறது. 


மேலும் நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கி 2 நாட்களிலேயே இந்த படத்துக்கு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது, தென்னிந்திய தொலைக்காட்சி வெளி மாநில அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 


அதில், “M/S ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் திரைப்பட நிறுவனத்தார் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இயக்குநராக AR முருகதாஸூம், ஒளிப்பதிவாளராக சுதிப்பும்,  மேளாலராக சுந்தரராஜன் உள்ளிட்டோர் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த தமிழ் திரைப்படத்துக்கு தாஹிர் (Taher) எனும் வெளி மாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்துகிறார்கள்.






வெளி மாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழ் திரைப்படங்களுக்கு பயன்படுத்துவதில்லை என பல கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், ஏற்கனவே தாங்கள் அறிவித்துள்ளீர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு மேற்படி பேச்சுவார்த்தையை மீறி வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை மேற்படி தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்துவதால் எங்களது அவுட்டோர் யூனிட் உரிமையாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


ஆகவே இன்று (16.02.2024) முதல் எந்தவித படப்பிடிப்புக்கும். சீரியல் படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என எங்களது அவசர பொதுக்குழு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இங்குள்ள அவுட்டோர் யூனிட்டுகளின் தொழில் நலன் காக்க ஒரு நிரந்தர தீர்வுக்கு வழி வகை செய்யுமாறு தங்கள் அனைவரையும் அன்படன் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் இன்று முதல் திட்டமிட்டபடி சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 




மேலும் படிக்க: Siren Review: தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!