மே முதல் வாரம் ஓடிடி ரிலீஸ்
மே மாதம் நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பில்லா, தீனா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4, கவின் நடித்துள்ள ஸ்டார்உள்ளிட்ட புதுப்படங்கள் திரையரங்கில் வெளியாக இருக்கின்றன . திரையரங்குகளுக்கு போட்டியாக ஓடிடி தளங்களும் பல்வேறு படங்கள், சீரிஸ்களை களமிறக்க இருக்கின்றன. இந்தப் படங்களின் லிஸ்ட் இதோ!
ஹீராமண்டி
பாலிவுட் ஜாம்பவான் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக இயக்கியிருக்கும் இணையத் தொடர் ஹீராமண்டி (Heeramandi) . சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி, அதிதி ராவ் ஹைதாரி, மனிஷா கொய்ராலா, ரிச்சா சட்டா உள்ளிட்ட நடிகைகள் இத்தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஹீராமண்டி என்றால் வைரச் சந்தை. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வரும் மே 1ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்தத் தொடர் வெளியாக இருக்கிறது.
ஷைத்தான்
இந்தியில் அஜய் தேவ்கன், ஜோதிகா மற்றும் மாதவன் நடித்து கடந்த மாதம் வெளியான படம் ஷைத்தான். ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. காஞ்சனா, அரண்மனை என பாகம் பாகமாக ஹாரர் படங்களை பார்த்து பழகிய தமிழ் ரசிகர்களை பயப்படுத்த இன்னும் கொஞ்சம் சிரத்தை வேண்டுமோ.. ஆனால் இந்தி ரசிகர்களிடம் ஷைத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலும் ஈட்டியது. வரும் மே 3 ஆம்தேதி நெட்ஃப்ளிக்ஸில் இப்படம் வெளியாக இருக்கிறது.
மஞ்சுமெல் பாய்ஸ்
கேரளாவில் தொடங்கி தமிழ்நாடு, ஆந்திரா என எல்லா ஏரியாவிலும் புழங்கிவிட்டு ஒருவழியாக ஓடிடி தளத்திற்கு வருகிறது மஞ்சுமெல் பாய்ஸ். கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் திரையரங்கில் ஓடி, 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இந்தப் படத்தை பெரும்பாலான கிராமம் முதல் நகரம் வரை இருக்கும் திரைப்பட ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். இருந்தும் மிச்சம் இருக்கும் விட்டுப்போன ரசிகர்களுக்கும் இன்னொரு முறை படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கும் இந்தத் தகவல். வரும் மே 5ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது மஞ்சுமெல் பாய்ஸ்.
ஆடு ஜீவிதம்
இந்த ஆண்டுவெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்த மலையாளப் படங்களில் மூன்றாவது படம் பிருத்விராஜின் ஆடு ஜீவிதம். திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஆடு ஜீவிதம் படம் கேரள திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் மற்றும் பி.வி.ஆர் மல்டிப்ளக்ஸ் நிறுவனத்திற்கு இடையில் நடந்த கருத்து வேறுபாடு காரணத்தில் திடீரென்று திரையரங்கில் இருந்து நீக்கப்பட்டது. இது அப்படத்தின் வசூலை பெரிய அளவில் பாதித்துள்ளது. வரும் மே 10ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஆடு ஜீவிதம் வெளியாகிறது.