கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. எனினும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்குள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், ஆகாஸ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் பராசக்தி, தனுஷின் இட்லி கடை, சிம்புவின் எஸ்டிஆர் 49 ஆகிய படங்களை தயாரிப்பது தான். இது குறித்து பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:  

சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகிய பிறகு பராசக்தி படத்தில் தான் நடிக்க இருந்தார். ஆனால், அந்த படம் ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய படம் என்பதால் அதிலிருந்தும் சூர்யா விலகினார். அதன் பிறகு தான் அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டானார். இப்படியொரு கதையில் நடித்தால் மக்களை எளிதில் கவர்ந்துவிடலாம். அதுமட்டுமின்றி படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் தான். படத்தை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயண்ட். அப்படியிருக்கும் போது படத்திற்கு எந்த சிக்கலும் இல்லை. வடக்கு பகுதியில் சிக்கல் வந்தாலும் அது படத்திற்கான பப்ளிசிட்டியாகிவிடும். மேலும், ஜன நாயகன் படத்திற்கு போட்டிக்கு வந்து வெற்றி பெற்றால் அடுத்து நம்ம தான் என்று கணக்கு போட்டார் அமரன் நடிகர்.

ஆனால், இப்போது தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்த ED ரெய்டுகள் சிவகார்த்திகேயனை கதி கலங்க வைத்துள்ளது. படம் தான் ஹிந்தி எதிர்ப்பு கதை என்றால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் வீட்டிலும் இப்படியொரு சர்ச்சை சம்பவம் எப்போது தீரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் வீட்டில் மட்டும் இதுவரையில் ஏன் ரெய்டு நடக்கவில்லை? அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு அதிகமானது எப்படி? என்று கேள்விகள் எழுப்பியுள்ளார். அதோடு அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைகள் குறித்தும் விமர்சித்துள்ளார். இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் தான் அதிக சோதனைகளும் நடந்திருக்கிறது.

பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியான பிறகு எத்தனை அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது? ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது? ஆனால், அதன் விவரங்கள் வெளியாகவில்லை. சீமான் வீட்டில் ரெய்டு நடந்ததா? ஒவ்வொரு நாளும் பிரபலங்கள் பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடக்கிறது. ஆனால், அது வெறும் தலைப்புச் செய்தியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறது. முறையான விசாரணையும் இல்லை, நீதிமன்ற தண்டனையும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதைத் தொடர்ந்து தான் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. தமிழக தேர்தல் காரணமாக இனி இது போன்ற ரெய்டுகள் நடந்து கொண்டே இருக்கும். அது ரெய்டாக மட்டுமே இருக்கும் என்று கொஞ்சம் விலாவாரியாக பேசி விளாசி  பதிவிட்டுள்ளார்.