சமந்தா நடிப்பில் பெரும் பொருட்செலவில் வெளியான டோலிவுட் திரைப்படம் சாகுந்தலம். 80 கோடிகள் பொருட்செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குணசேகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மணி சர்மா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நீலிமா குணா தயாரித்துள்ள இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவான சாகுந்தலம் படம் பான் இந்தியா திரைப்படமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.
சமந்தாவுடன் தேவ் மோகன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில், அதிதி பாலன், சச்சின் கெதெக்கர், கௌதமி, மோகன்பாபு,பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில வாரங்களாகவே முழுவீச்சில் ஈடுபட்டிருந்த நிலையில், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்தது. இந்நிலையில், படக்குழுவினரின் நம்பிக்கைகளுக்கு மாறாக சாகுந்தலம் படம் தெலுங்கு சினிமாவில் வரலாறு காணாத பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காளிதாசர் எழுதிய புராணக்கதையான அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளே படம் பார்த்த விமர்சகர்கள் சமந்தாவின் திரைப் பயணத்தில் இந்தப் படம் ஒரு சீரியல், இந்தி சீரியலா புராணக் கதையா எனத் தெரியவில்லை என விமர்சனங்களை முன்வைத்தனர்.
சமந்தாவின் நடிப்பு மட்டுமே பாராட்டுகளைப் பெற்ற நிலையில், படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஎஃப்எக்ஸ், இசை என அனைத்தும் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளத்தின்படி சாகுந்தலம் படம் முதல் நாள், 3.2 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 1.85 கோடிகளும், மூன்றாம் நாள் 1.65 கோடிகளும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் முதல் வார இறுதியில் சாகுந்தலம் திரைப்படம் 7 கோடிகள் வரை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டோலிவுட்டில் மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம் முதல் வார இறுதியில் இவ்வளவு குறைவாக வசூலித்ததில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தா நன்றாக நடித்தும் சாகுந்தலம் படம் தோல்வியைத் தழுவியுள்ளது சமந்தா ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
மேலும் படிக்க: 19 Years of Gilli: ஆல் ஏரியாவுல நம்ப கில்லிடா...! ரீமேக் படத்திற்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தெரியுமா?