டாப் ஸ்டார் பிரசாந்த்


கோலிவுட் சினிமாவுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து 90கள் மத்தியில் தொடங்கி டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமாகி பல எவர்க்ரீன் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.


பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடித்தது தொடங்கி, செம்பருத்தி, ஜோடி, ஜீன்ஸ், மஜ்னு, பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள் என பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ள பிரசாந்த், பலரது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கடந்த பத்து ஆண்டுகளில் தன் திரைப்பயணத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளார்.


50ஆவது பிறந்தநாள்


இச்சூழலில், நேற்று முன் தினம் (ஏப்.06) நடிகர் பிரசாந்த் தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அவருக்கு ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 


இந்நிலையில், முன்னதாக தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்த ஜோடி பட இயக்குநர் பிரவீன் காந்தி, பிரசாந்தின் வீழ்ச்சிக்கு அவரது திருமணமே காரணம் எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஜய், அஜித்தவிட ஓஹோனு இருக்கார்...


ரட்சகன் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரவீன் காந்தி, பிரசாந்தை வைத்து ஜோடி, ஸ்டார் என இரு படங்களை இயக்கியுள்ளார். விஜய், அஜித்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருந்த பிரசாந்தின் வீழ்ச்சி பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், "அவரோட வீழ்ச்சி கவலை தருது. ஆனால் இந்த நிலை தப்பான நிலை அல்ல. விஜய், அஜித்தைவிட இன்று ஓஹோனு இருப்பவர் பிரசாந்த் தான். பிரசாந்த் டவர் எனும் பெயரில் டி நகரில் ஒன்பது அடுக்கு மாடியில் ஜம்மென்று நகைக்கடை போட்டு அமர்ந்துள்ளார்.




பிரசாந்த் சாரையோ, தியாகராஜன் சாரையோ குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் சினிமா கரியரில் அவரது திறமைகள் முடக்கப்பட்டிருப்பது வருத்தமான விஷயம். ஜோடி படத்தின் ஒரு சண்டைக்காட்சி போறபோக்கில் எடுத்தது. கனல் கண்ணன் மிரண்டுவிட்டார். பிரசாந்துக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும், நடனம் தெரியும், இப்போதும் க்யூட்டாக இருக்கிறார். அவருக்கு இன்றும் நிறைய பெண் விசிறிகள் உள்ளனர். அவருக்கு உளவியல் சிக்கல் தான். திருமணம் தான் பிரச்சினை.


கல்யாணம், விவாகரத்து அவரது தொழிலை முடக்கிவிட்டது


ஆழ்மனதில் சில விஷயங்கள் உட்கார்ந்துவிட்டால் அது நம்மை முடக்கிவிடும். திருமணத்தில் நியாயப்படுத்த அவர் போராடியது ஏழு, எட்டு ஆண்டுகளை அவரது கரியரில் முழுங்கிவிட்டது. அடுத்த வேலைக்கு போய் இருக்க வேண்டும். அதுதான் இன்று வரை அவருக்கு டிஸ்டர்பாக உள்ளது. பிரசாந்த் போல் போட்டியாளர் இல்லாதது விஜய், அஜித்துக்கே கவலையாக இருக்கும்.


ஜோடி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் என மூன்று ஹிட் கொடுத்து டாப் ஸ்டாராகத் திகழ்ந்தார். விஜய், அஜித் அப்போது வளர்ந்து கொண்டு வந்தனர். அதன் பின் விஜய், அஜித் ஆதிக்கம் செலுத்தியபோது கொஞ்சம் பிரசாந்த் பின்தங்கினார். அப்போது தான் அவரது திருமணப் பிரச்னைகள் நிகழ்ந்தன.


அதில் கவனம் செலுத்தும்போது தான் கரியரில் சிக்கல்கள் எழுந்தன. அப்போது பல கஷ்டங்கள் ஏற்பட்டு அவரை  பலர் டிஸ்டர்ப் செய்துவிட்டனர். அதன் பின் அவருக்கு சரியாக படங்கள் அமையவில்லை. ஆனால் இப்போது பிரசாந்த் செய்துகொண்டிருக்கும் அந்தகன் படம் அவரது திரை வாழ்க்கையை புரட்டிப்போடும் என நம்புகிறேன்.


அன்றே கணித்தார் பிரசாந்த்


பிரசாந்தின் ஸ்க்ரிப்ட் நாலேஜ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜோடி படத்தின் இரண்டாம் பாதியைக் கேட்டு அன்றே அந்தப் படம் சூப்பர் ஹிட்டாகும் என பிரசாந்த் கணித்துள்ளார்.  


ஜோடி கதை விஜய்க்கு பிடித்தது. ஜோடிக்கு பின்னும் விஜய்க்கு கதை சொன்னேன். ஆனால் அது ஏனோ அமையவில்லை. எனக்கு பொறுமையில்லை" என பிரவீன் காந்தி பேசியுள்ளார்.


நடிகர் பிரசாந்த் தொழிலதிபரின் மகளும் ஏற்காட்டைச் சேர்ந்தவருமான கிரகலட்சுமி என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், வெகு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்து பிரிந்தனர்.