நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு, அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திய கில்லி படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகளை கடந்துள்ளது. நாம் இந்த கட்டுரையில் கில்லி படம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை காணலாம்.
தெலுங்கில் மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி படம் என்றாலும் தமிழில் தரமான கமர்ஷியல் படமாக உருவாக்கி இருப்பார் இயக்குனர் தரணி. குறிப்பாக இந்த படத்திற்கு முன்னால் விஜய் நடித்த திருமலை படம் வெளியாகி அவருக்கு ஆக்ஷன் ஹீரோவுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது. அதனை சரியாக பின்பற்றி வெளியான கில்லி படம் விஜய்யின் கேரியரில் மாஸ் ஹிட் கொடுத்தது என்றே சொல்லலாம்.
மறக்க முடியாத கேரக்டர்கள்
சென்னையில் கண்டிப்பு மிக்க தந்தையாக ஆஷிஷ் வித்யார்த்தி, அப்பாவி அம்மாவாக ஜானகி சபேஷ், சுட்டித்தனமான தங்கையாக ஜெனிபர் என அழகான குடும்பம் ஒரு பக்கம், மறுபுறம் மதுரையில் வில்லன் பிரகாஷ்ராஜிடம் மாட்டிக் கொள்ளும் திரிஷா ஒரு பக்கம் என சுமூகமாக கதை சென்று கொண்டிருக்கும். மதுரைக்கு கபடி விளையாட செல்லும் விஜய், த்ரிஷாவை பிரகாஷ் ராஜிடம் காப்பாற்றும் காட்சிகளில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்தது கில்லி.
கில்லி படம் உருவான கதை
ஒக்கடு படத்தின் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி வைத்திருந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் நடிகர் விஜய் தரணி இந்த படத்தை இயக்குவாரா என கேட்டுள்ளார். அதற்கு முந்தைய நாள் தான் தரணி ஒக்கடு படத்தைப் பார்த்துள்ளார். மேலும் தூள் படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்துள்ளார்.
இதற்கிடையில் சரியாக மறுநாள் ஏ.எம்.ரத்னம் தரணியிடம் ஒக்கடு படம் ரீமேக் இயக்குவது பற்றி கேட்டுள்ளார். சரி என ஒப்புக்கொண்ட தரணி, பின் ஒரு வாரம் டைம் கேட்டுள்ளார். எதற்கு என கேள்வியெழுப்பட, நான் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிய ஊருக்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என சொல்லியுள்ளார். மேலும் ஒக்கடு படத்தின் இயக்குநரையும் சந்தித்து பேச வேண்டும். அவர் ஒரிஜினல் படத்தில் செய்ய நினைத்து முடியாத விஷயங்கள் என்ன என்பது எனக்கு தெரிய வேண்டும். மக்கள் முழுவதுமாக இந்த படத்தை ரசித்தார்களா அல்லது ஏதேனும் குறை இருந்ததா என்பது கேட்டு தெரிந்து கொண்டால் அதை இந்த சரி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு தான் இந்த படத்தை செய்ய ஒப்புக் கொண்டேன்.
அதேசமயம் ஒக்கடு படத்தில் இரண்டாம் பாதி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிய வந்துள்ளது.
கில்லி படத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள்
கில்லி படத்திற்கு முன்னால் இயக்குனர் தரணியிடம் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு கதை தயாராக இருந்துள்ளது. காரணம் அப்போது தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து பெரிய அளவில் படங்கள் வந்தது இல்லை என்பதால் இதனை அவர் கையில் எடுக்க முடிவு செய்திருந்தார். அதன் பிறகு கலங்கரை விளக்கத்தில் ஒரு காதல் ஜோடி இருந்தால் எப்படி இருக்கும் என்றும், அதேபோல் சேஸிங் காட்சிகளை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இப்படி 3 தனித்தனியாக எண்ணத்திலிருந்த கதையை மொத்தமாக கில்லி படத்தில் அப்ளை செய்ய முடிந்து அதில் தரணி வெற்றியும் பெற்றார்.
ஒக்கடு படத்தின் கதையில் இருந்து சில சில மாற்றங்கள் செய்து கதை சொல்வதற்காக விஜய்யை சந்திக்க சென்றிருந்தார் தரணி. இது ரீமேக் படம் தானே என விஜய் கேட்க, ஆனால் ஒரிஜினல் படத்திலிருந்து சில காட்சிகளை மாற்றம் செய்து சொல்ல வந்திருக்கிறேன். ஓகே என்றால் படம் பண்ணலாம். இல்லையென்றால் வேறு இயக்குநரை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி முழுக்கத்தையும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட பிறகு இந்த படத்தில் நடிக்கிறேன் என விஜய் சொல்லி இருக்கிறார்.