IPL 2023 RCB vs CSK: ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் போட்டிகளில் ஒன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஒன்று. இம்முறை இரு அணிகளும் வேறு வேறு குழுக்களில் இடம் பெற்றுள்ளதால் ஒரு போட்டி மட்டுமே லீக் சுற்றில் இரு அணிகளும் மோதும். இந்த போட்டி இன்று (ஏப்ரல் 17) பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பந்து வீச முடிவு செய்தார். இந்த மைதானத்தில் சேஸ் செய்யும் அணி அதிகம் வெற்றி பெற்றுள்ளதால், பெங்களூரு அணி இந்த முடிவினை எடுத்தது. இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னை அணிக்கு மிகவும் சிறிய மைதானமான சின்னச் சாமி மைதானத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்வாட் மற்றும் கான்வே செட் ஆவதற்குள் ருத்ராஜ் கெய்க்வாட் 3 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆட, சென்னை அணியின் ரன் சீராக உயர்ந்தது.
இருவரும் இணைந்து பவர்ப்ளே முடிவில் 50 ரன்களை கடக்க வைத்தனர். இருவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ஹரசங்கா வீசிய பந்தை தூக்கி ஆட முயற்சி செய்த ரஹானே க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஷிவம் டூபே ருத்ரதாண்டவ ஆட்டம் ஆட சென்னை அணி 14.3 ஓவர்களில் 154 ரன்களை எட்டியது. களமிறங்கியது முதல் ஆக்ரோஷமானா ஆட்டத்தினை வெளிப்படுத்திய கான்வே அரைசதம் கடந்து சதத்தினை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தார். ஆனால் அவர் 45 பந்தில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்சல் பட்டேல் பந்து வீச்சில் போல்ட் ஆனார். கான்வே 6 பவுண்டரியும் 6 சிக்ஸரும் விளாசியிருந்தார்.
மறுமுனையில் இருந்த டூபே 25 பந்தில் தனது அரைசத்தினை பூர்த்தி செய்து தனது விக்கெட்டை இழந்தார். களமிறங்கியது முதல் சிக்ஸர்கள் பறக்க விட்ட 2 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர் 111 மீட்டருக்கு பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சென்னை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில்6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரில் விராட் கோலி தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் மகிபால் ரோம்ரர் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளசிஸ் சென்னை அணியின் பந்து வீச்சை நொருக்கித் தள்ளினர். இருவரும் அரைசதம் கடந்து ருத்ரதாண்டவமாடினர். இதனால் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. மேக்ஸ்வெல் 76 ரன்களும் டூ ப்ளசிஸ் 62 ரன்களும் சேர்த்த நிலையில் தங்களது விகெட்டினை இழந்தனர். தினேஷ் கார்த்திக் 28 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.