நேற்றைய உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதால் தான் மிகவும் அழுததாகவும், தன் நெஞ்சம் உடைந்து சிதறியதாகவும் செல்வராகவன் (Selvaraghavan) பதிவிட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு இந்திய திரைப் பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று இந்திய அணியை ஊக்குவித்தனர்.
நேரில் செல்ல முடியாத பிரபலங்களும் ரசிகர்களும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இந்திய அணியை சியர் செய்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்றது.
முன்னதாக, கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைச் சந்தித்த நிகழ்வு, 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்த நிலையில், வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய ரசிகர்கள் மனமுடைந்தனர்.
சமூக வலைதளங்களில் நேற்று முதல் ரசிகர்கள் கண்ணீர் மல்க பதிவுகளைப் பகிர்ந்து வரும் நிலையில், பிரபல இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் மனமுடைந்த இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
“நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு நான் அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக தன் இணைய பக்கத்தில் ஆக்டிவாக ரசிகர்களுடன் உரையாடி வரும் நிலையில், மனமுடைந்து அவர் பகிர்ந்துள்ள இந்தப் பதிவில் செல்வராகவனுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
செல்வராகவன் இறுதியாக தன் தம்பி தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். யுவன் இப்படத்துக்கு இசையமைத்திருந்த நிலையில், ஹாரர் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியிருந்தது.
மற்றொருபுறம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், பகாசுரன், ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கும் டி50 படத்திலும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Maniratnam: "அஜித், விஜய்க்காக சண்டையிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை" - ரசிகர்களுக்கு மணிரத்னம் அறிவுரை