டெல்லியில் 11 நாட்கள் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, இன்று (நவ.20) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் விளையாட்டு, அசெம்ப்ளி உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


டெல்லியின் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நவம்பர் 10-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.  6-12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.


குளிர்கால விடுமுறை


இதைத் தொடர்ந்து கடும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவம்பர் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.


வழக்கமான குளிர்கால விடுமுறை நவம்பர் இறுதியில் விடப்படும் நிலையில், முன்னதாகவே விடுமுறை அளிக்கப்பட்டது. குளிர்காலம் முடிவடைந்த பிறகு காற்றின் தரம் மெல்ல சீரடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லியின் இன்றைய (நவ.20) காற்றின் தரக் குறியீடு (Air Quality Index)  மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக ’மிக மிக மோசம்’ என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு இருந்தது.






தற்போது சற்றே காற்றின் தரம் உயர்ந்துள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள், சுரங்கப் பணிகள், டீசல் ஜெனரேட்டர்களுக்கான தடை உள்ளிட்ட மற்ற அனைத்து தடைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒரு வார காலத்துக்கு இல்லை


அதேபோல பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் விளையாட்டு, அசெம்ப்ளி உள்ளிட்ட வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்கு இவை எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகின் மாசுப்பட்ட நகரங்களில் டெல்லி இடம்பெற்றுள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்கள் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் மும்பையும் கொல்கத்தாவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.