ஆர்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
காமெடியில் மட்டும் கொடி கட்டிப் பறந்த காலம் போய், ஹீரோ அவதாரம் எடுத்து சமீப ஆண்டுகளாக சந்தானம் கலக்கி வருகிறார். வல்லவனுக்கு புக்கும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் என சந்தானம் முழு நீள காமெடி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். எனினும் மற்றொருபுறம் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் சில படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன.
இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம், குலு குலு ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது தில்லுக்கு துட்டு படங்களின் வரிசையில் மீண்டும் ஹாரர் கலந்த காமெடி பாணி படத்துக்குத் திரும்பியுள்ளார்.
அமானுஷ்ய பங்களா ஒன்றில் சிக்கிக் கொண்டு பேயுடன் ஹாரர் விளையாட்டுக்களில் ஈடுபடும் ஒரு குழுவை மையப்படுத்தி அமைந்துள்ள இந்தக் கதையில், சந்தானத்துடன் நடிகை சுரபி, நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.
இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படம் சந்தானத்துக்கு ஸ்டடியான வெற்றியை கோலிவுட்டில் பெற்றுக் கொடுக்குமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
தற்போதைய ட்ரெண்டில் காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக வளர்ந்து ஹிட் கொடுத்து மாஸ் காண்பித்து வருகின்றனர். யோகிபாபு மண்டேலா படத்தில் இதனைத் தொடங்கிய நிலையில், நடிகர் சூரி விடுதலை படத்திலும், மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலும்வும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.
ஆனால், ஹீரோ இன்னிங்ஸை இவர்கள் அனைவருக்கும் முன்னதாகவே சந்தானம் தொடங்கிய நிலையில் ஒரு சிறப்பான ஹிட் படம் அவருக்கு இன்றுவரை அமையவில்லை. இந்நிலையில் இந்தப் படம் சந்தானத்துக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.