நடிகர் அதர்வாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படம் வெளியாகி இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது.
அதர்வா முரளியின் ஆட்டோகிராஃப்
மறைந்த நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் அதர்வா. தொடர்ந்து தனது முயற்சியால் படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் 2017ஆம் ஆண்டு அதர்வா, சூரி, பிரணிதா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி, மொட்டை ராஜேந்திரன் என பலரின் நடிப்பில் வெளியான படம் தான் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'. ஓடம் இளவரசு இயக்கிய இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
தனது திருமண அழைப்பிதழை, தான் காதலித்து ஏமாற்றிய பெண்களை தேடி சென்று கொடுக்கும் ஜெமினிகணேசன் எனும் இளைஞரைப் பற்றியது தான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இந்த தேடிபோகும் வேலையில் உதவுகிறார் சுருளிராஜன். இந்தக் கதை சேரன் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் அப்டேட் வெர்ஷன். ஆங்காங்கே காமெடி காட்சிகளை சேர்த்து வித்தியாசமாக கொடுக்க முயற்சி செய்திருந்தார் ஓடம் இளவரசு.
ஜெமினி கணேசனாக அதர்வாவும், சுருளிராஜனாக சூரியும் நடித்திருந்தனர். எந்தக் காதலியாவது கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்தால் அந்தக் காதலுக்கு முடிவு கட்டும் ‘அடப்பாவி’ இளைஞராக அதர்வா. இந்த காமெடி ஸ்டோரிக்கு அவர் அழகாக பொருந்தியிருந்தார். கீழ் வீட்டு ரெஜினா, மேல் வீட்டு அதிதி, ஊட்டியில் ப்ரணிதா, கருணை இல்லத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் என 4 பேரை கண்டதும் காதல் தொடங்கி, கழட்டி விடுவது வரை அதர்வா வித்தியாசமாக முயற்சி செய்திருந்தார்.
முதலில் இந்தப் படத்தில் நடிகை அதிதி கேரக்டரில் நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தன் கேரக்டரில் முக்கியத்துவம் இல்லாததால் விலகினார். இதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரில் பிரணீதா நடிப்பதாக இருந்தது. பின்னர் இருவரின் கேரக்டர்களும் மாற்றம் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் ரிலீஸ் செய்யப்பட்டது.