சந்தானம் நடித்து வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் 250 மில்லியன் பார்வை நிமிடங்களை எட்டியுள்ளது. இதற்காக  நடிகர் சந்தானத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.

டிடி ரிட்டர்ன்ஸ்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்’.  இப்படத்தில் சுரபி, பெப்சி விஜயன், மாறன், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், தீபா என மிகப் பெரிய நகைச்சுவை திரைப்பட்டாளமே நடித்திருந்தனர். காமெடி கலந்த ஹாரர் ஜானரில் வெளியான இப்படம் வசூல்ரீதியிலும் விமர்சனரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ்ஆஃபிசில் சுமார் 20 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு; படத்தின் சீக்வெல் வர்ஷனாக வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் பேய் பங்களாவில் மாட்டிக்கொண்ட சந்தானம் மற்றும் டீம் படும் அவஸ்தை ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ஜீ ஃபை ஓடிடி தளத்தில் வெளியானது டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம்.

ஓடிடியில் கலக்கும் டி டி ரிடர்ன்ஸ்

ஓடிடி தளத்தில் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம். திரையரங்கத்தில் படத்தைப் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார்கள். மேலும் சந்தானம் படங்கள் பொதுவாகவே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் நகைச்சுவையாக இருப்பதால் போர் அடிக்கும்போதெல்லாம் பார்க்கும் ஒரு படமாக சந்தானம் நடித்தப் படங்கள் இருக்கின்றன.

இதன் விளைவாக வெளியாகிய ஒரு மாத காலத்திற்குள்ளாக இதுவரை 250 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது டி.டி. ரிட்டர்ன்ஸ் திரைப்படம்.

நண்பேண்டா

இதனைப் பாராட்டும் வகையில் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து ‘என் நண்பன்’ என்று பதிவிட்டுள்ளார்.

கிக்

சந்தானம் நடித்து  கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் கிக். பிரஷாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஃபார்ட்யூன் ஃபிலிம்ஸ் தயாரித்த கிக் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில் நேற்று செப்டம்பர் 28 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது.


மேலும் படிக்க : Cauvery Issue: படை எடுக்க முடியுமா? அணை திறக்க முடியுமா - காவிரி விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்..

Tamil Cinema: பெண்கள் பலவீனமானவர்களா?.. இறைவன் படத்துக்கு எழும் எதிர்ப்பு.. எதை நோக்கி செல்கிறது தமிழ் சினிமா?