என்னிடம் இருந்த தன்னம்பிக்கை தான் இத்தகைய இடத்துக்கு என்னை வரவழைத்துள்ளது என பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் 2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக எண்ட்ரீ கொடுத்தார். இந்த படம் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக் ஆகும். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் கெரடம் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழில் ‘தடையற தாக்க’ படம் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, ப்ப்பூ ஆகிய சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் தெலுங்கு மற்றும் இந்தியின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அடுத்ததாக அவர் நடிப்பில் அயலான், இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ரகுல் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். மேலும் கடந்த மே மாதம் க்ரயோதெரப்பி என்னும் தசைகளுக்கான சிகிச்சையை -15 டிகிரி செல்சியஸில் இப்படி மூழ்கி எழுந்து மேற்கொண்டுள்ளதாகவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இப்படியான நிலையில் ரகுல் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் இளம் வயது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், “நான் பெரிய திரையில் வர வேண்டும் என்று கனவு கண்ட ஒரு இளம் பெண். சினிமா தொழில் பற்றி எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் மாடலிங் முதல் மிஸ் இந்தியா மற்றும் திரைப்படங்கள் வரை நம்பிக்கையுடன் மட்டுமே இந்த பயணத்தை தொடங்கினேன்.
மேலும் இந்த பயணம் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும், ஏற்றம் இறக்கம் நிறைந்தது. நான் மும்பைக்கு இடம் மாறியதும், சொந்தக்காலில் இளம் வயதில் யாரையும் எதிர்பார்க்காமல் தனிச்சையாக போராடியது சவாலான விஷயம் தான். ஆடிஷனுக்காக வரிசையில் நிற்பது முதல் நடிக்க வாய்ப்பு கேட்ட ஏஜென்ட்/இயக்குனர்கள் வரை பல அழைப்புகள் வரை, படங்களில் ஒப்பந்தம் செய்து பலமுறை மாற்றப்பட்டு இறுதியாக உங்கள் இதயங்களில் இடம் பிடித்தது வரை எல்லாமே ஒரு அழகான கற்றல் அனுபவமாக இருந்தது.
என்னிடம் இருந்த ஒரே விஷயம் என்னை நம்பியது, தன்னம்பிக்கை மட்டும் தான். மேலும் நான் எப்போதும் கூடுதல் கடினமாக உழைக்கிறேன் மற்றும் உறுதியான பணி நெறிமுறையைக் கடைப்பிடிப்பேன். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், கனவுகள் எளிதானவை அல்ல, ஆனால் நீங்கள் குறைவாகப் பயணிக்கும் பாதையில் செல்ல முடிவு செய்தால். ஒவ்வொரு சிறிய வெற்றியையும் கொண்டாட வேண்டும்.
ஆனால் உங்கள் இலக்கு பெரிதாக இருந்தால் அதை நோக்கி தொடர்ந்து உழைத்து அதைச் சாதிப்பதும் ஒரு முக்கிய அம்சமாகும்! அதை நிஜமாக்குங்கள். எனது ஆணிவேரான எனது குடும்பம் மற்றும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அளப்பரிய அன்பின் காரணமாக இவை எதுவும் சாத்தியமில்லை” என நெகிழ்ச்சியாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.