ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள இறைவன் படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் சினிமா எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. 


பொதுவாக சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பரிணாம வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாது. அது கதையாக இருந்தாலும் சரி, டெக்னாலஜி விஷயமாக இருந்தாலும் சரி சரியான அளவில் கொடுத்தால் ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள். ஆனால் சிறிது தவறாக இருந்தாலும் விமர்சித்து தள்ளி விடுவார்கள். அதுவும் சமூக வலைத்தளங்கள் பெருகி விட்ட இந்த காலக்கட்டத்தில் உடனுக்குடன் எதிர்வினைகள் ஆற்றப்பட்டு வருகிறது. 


இதில் நம்முடைய இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால் மக்களின் நாடி, நரம்புகளில் உணர்வுப்பூர்வமாக ஊறிப் போன ஒன்று. எந்த காலக்கட்டத்திலும் பிரித்து பார்க்கவே முடியாது. திரையில் தன்னுடைய விருப்பமான பிரபலத்துக்கு ஏதாவது நடந்து விட்டால் அதை தரையில் இருக்கும் ரசிகனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் சமீப காலமாக படங்களில் காட்டப்படும் பல காட்சிகள் நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. 


நேற்று வெளியான இறைவன் படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக வெளியாகியுள்ளது. இதில் வில்லனாக வரும் ராகுல் போஸ் இளம் பெண்களை கடத்துவதும், கொடூரமான முறையில் கண்களை தோண்டியும், கால்களை அறுத்தும், சுத்தியலால் தலையில் அடித்தும் சித்திரவதை செய்து கொலை செய்வார். தொடர்ந்து இரண்டாம் பாதியில் கொலை செய்யப்பட்டவர்களின் கடைசி நிமிடத்தை வீடியோ எடுத்து அவர்கள் குடும்பத்தினர் படும் அவஸ்தையையும், அவர்கள் தற்கொலை செய்வதாகவும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். 


இதையெல்லாம் தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பதறித்தான் போனார்கள். எப்படி இப்படி ஒரு படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்தார்கள் என்று தான் கேள்வி எழுந்தது. ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்து விட்டால் படங்களில் என்ன வேண்டுமானாலும் காட்டலாமா என பலரும் வெளிப்படையாக விமர்சித்து இருந்தனர். 


இதே படத்தில் மற்றொரு காட்சி வரும். அதன்படி சற்று நடுத்தர வயது பெண் ஒருவர் வில்லனை பார்த்து பயப்படுவார். அதற்கு, சின்ன பொண்ணுங்க தான் என்னை பார்த்து பயப்படணும், நீ இல்ல என நக்கலாக பதிலளிப்பார். அதேபோல் தன்னை பார்த்து பயப்படும் பெண்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும் அந்த சைக்கோ வில்லன் கேரக்டர், தன்னை பார்த்து பயப்படாத பெண்ணிடம் மயங்கி உடலுறவு செய்வது போன்ற காட்சியும் இடம் பெறும். 


இது எந்த மாதிரியான மனநிலை என்றே புரியவில்லை. சைக்கோ நபர்களின் டார்கெட் என்பது இளம் பெண்கள் தானா?..மீண்டும் மீண்டும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை தான் இந்த சமூகம் சொல்லிக்கொண்டிருக்குமா? என்ற கேள்விகளுக்கும் இங்கு விடையில்லை. சமூகத்தில் நடக்காத குற்றங்கள் இல்லை. அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என யாரும் சொல்வதில்லை. ஆனால் விறுவிறுப்பை வரவழைக்கின்றேன் என்ற பெயரில் பயத்தையோ, அருவருப்பையோ ஏற்படுத்தக்கூடாது என்பதே உண்மை. 


சைக்கோ த்ரில்லர் படங்களில் பெண்களை கொடூரமாக தாக்குதலுக்கு ஆளாக்குவது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, அத்தகைய சூழலில் என்ன செய்யலாம் என காட்டப்படுவதே இல்லை. இதே பாணியில் 5 ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம் சந்திக்காத விமர்சனம் இல்லை. ஆனால் அதில் ஒரு காட்சியில் சைக்கோ கில்லரிடம் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என மாணவியிடம் சொல்ல, அவரும் பதற்றமான நிலையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தப்பிக்க முயற்சியிருப்பார். இந்த காட்சிக்கு தியேட்டரில் எத்தகைய வரவேற்பு கிடைத்தது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. 


உண்மையில் நாம் பிரச்சினையில் சிக்கியவர்களை கண்டு பரிதாபமோ/ பயமோ கொள்வதை காட்டிலும், அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதில் அதீத கவனம் செலுத்துகிறோம். திரைப்படங்களிலும் அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.


சூப்பர் ஸ்டார் ரஜினி படம் தொடங்கி விஜய், கமல் என பலரது படங்களிலும் சமீப ஆண்டுகளில் வன்முறை காட்சிகள் அதிகரிப்பதாக சொல்லும் நாம், இத்தகைய சைக்கோ த்ரில்லர் படங்களில் காட்டப்படும் கொடூரமான கொலைகள் பார்த்தால் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டு கடந்து செல்கிறோம்.  நாம் கண்முன்னே பார்க்கும் காட்சி நமக்குள் உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு இந்த மாதிரியான காட்சிகளுக்கும் நம் எதிர்ப்பை பதிவு செய்வது மிக முக்கியம். இறைவன் என படத்தின் பெயரை வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் புனித செயலா? என்ற கேள்வி தான் எழுகிறது.