மக்கள் நண்பனாக எம்.ஜி.ஆர்., ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். ரிக்ஷாக்காரனாக, படகோட்டியாக, கூலித் தொழிலாளியாக இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு ஒரு பத்திரிக்கையாளராக எம்.ஜி.ஆர்., நடித்த படம் தான் சந்திரோதயம். அட்டைப்படங்களில் கவர்ச்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை, நாளிதழ் ஒன்றின் மீது ஏற்பட்ட மனகசப்பு ஆகியவை தான் சந்திரோதயம் போன்ற ஒரு படத்தை தேர்வு செய்ய எம்.ஜி.ஆர்.,க்கு தோன்றியது. 1966 ம் ஆண்டு இதே நாளில் (மே 27) 55 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு ,சூப்பர் ஹிட் ஆன சந்திரோதயம் திரைப்படம் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது பலருக்கு தெரியாது. ஏன் வந்தது சந்திரோதயம்? என்ன செய்தது சந்திரோதயம்?
எங்கிருந்து உதயமானது சந்திரோதயம்?
‛புதியதோர் உலகம் செய்வோம்’ என்கிற பாரதிதாசனின் வரிகளுடன் துவங்கும் படத்தில், ராம‛சந்திரோதயம்’ என்று வித்தியாசமான டைட்டில் போட்டு பூரண நிலவில் எம்.ஜி.ஆர்., இருப்பதைப் போன்று திரையில் தோன்றும் அந்த நொடியே ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு தியேட்டர்களை கதிகலங்க வைத்துள்ளது. கவர்ச்சி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்கிற நிலையில் இருந்த அன்றைய பத்திரிக்கை தர்மத்திற்கு எதிராக போர் தொடுக்க விரும்பினார் எம்.ஜி.ஆர்., அதன் விளைவு தான் சந்திரோதயம் பிறந்தது. வில்லியம் வைலர் என்ற ஹாலிவுட் இயக்குனரின் ‛ரோமன் ஹாலிடே’ படத்தின் கதை கரு தான், எம்.ஜி.ஆர்.,க்கு உதயமான சந்திரோதயம் என்பார்கள். அரசாங்க பயணமாக ரோம் நகருக்கு வரும் ஐரோப்பிய இளவரசி, கட்டுப்பாடுகள் இன்றி சுற்றித்திரிய விரும்புகிறார். ஆனால் அதற்கு வாய்ப்பின்றி போக, மனவெறுத்து அங்கிருந்து வெளியேறும் அவள், தங்க இடமின்றி ஒரு பத்திரிக்கையாளருடன் தங்க நேர்கிறது. அந்த இரவு அவர்களுக்குள் காதல் மலர்கிறது. மறுநாள் தன் பொறுப்புகள் உணர்ந்து பணிகளுக்காக இளவரசி சென்று விட, அன்றைய தினம் ரோம் நகர செய்தியாளர்களை சந்திக்கிறார். அதில் தன்னுடன் தங்கிய காதலனும் இடம் பெறுகிறார். அப்போது தான் அவர் இளவரசி என்பதே அவருக்கு புரிகிறது. மறக்க முடியாத ரோம் அனுபவம் குறித்து செய்தியாளர்கள் கேட்க, தான் இரவில் தங்கிய போது சந்தித்த அனுபவத்தை சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளருக்கு மட்டும் புரியும் வகையில் பூடகமாக சொல்லி முடிக்கிறார் இளவரசி. ‛தனிப்பட்ட உறவுகள் குறித்த எந்த செய்தியும் வெளிவராது,’ என்று இளவரசிக்கும் மட்டும் புரியும் படி, அந்த சபையில் தெரிவிக்கிறார் அந்த பத்திரிக்கையாளர். இளவரசியின் இன்ப இரவுகள் என தனக்கு தெரிந்ததை அந்த செய்தியாளர் எழுதியிருந்தால், அவருக்கு அதிக பணம் கிடைத்திருக்கும். ஆனால், காதலுக்கு மதிப்பளித்து அவர் அவற்றை தவிர்த்திருப்பார். பரஸ்பர ஒரு நாள் காதலோடு விடைபெறுவார் இளவரசி. இந்தக் கரு தான் சந்திரோதயம். ஆனால் கரு மட்டுமே இருக்கும். ஒட்டுமொத்த படமும் தமிழுக்கானது. எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கானது.
எம்.ஜி.ஆர்., பணியாற்றிய தினக்கவர்ச்சி
எம்.ஆர்.ராதா நடத்தும் தினக்கவர்ச்சி என்ற நாளிதழில் தான் எம்.ஜி.ஆர்., செய்தியாளராக பணியாற்றுவார். கவர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை தரும் முதலாளி; சமூக அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பும் செய்தியாளர். இது ஒன்று போதாதா முட்டிக்கொள்ள. பெற்றோர் யார் என்று தெரியாமல் நின்று போன பெண் ஒருவரின் செய்தியை கொண்டு வருகிறார் எம்.ஜி.ஆர்., அதே பெண் நடத்தை சரியில்லாதவர் என செய்தி வெளியிடுகிறார் எம்.ஆர்.ராதா. சம்மந்தப்பட்ட பெண் தற்கொலை செய்கிறாள். அதன் பின் எம்.ஜி.ஆர்., முயற்சிக்கும் சந்திரோதயம் தான் புதிய ஊடக தர்மம் பேசும் சந்திரோதயம். பத்திரிக்கைகளின் ஏகோபித்த ஆளுமை இருந்த அந்த சமயத்தில் ஒரு நடிகராக, பத்திரிக்கைகளை எதிர்த்து ஒரு படத்தை எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர் எம்.ஜி.ஆர். தான் போற்றி வணங்கிய அண்ணாத்துரையின் சந்திரோதயம் என்கிற நாடகத்தின் தலைப்பை தான் தனது படத்திற்கு சூட்டி மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர். படம் வெளியானபிறகு சந்திரோதயம் என்கிற பெயரில் பத்திரிக்கை தொடங்கவும், அதற்கு எம்.ஜி.ஆர்., தான் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது என்றால் ,அந்த படத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
கொண்டாடப்பட்ட பாடல்கள்
சந்திரோதயம் படத்தின் அடையாளங்களாக இன்று இருப்பவை மாலை அணிந்த எம்.ஜி.ஆர்.,யின் புன்னகை புகைப்படமும், படத்தில் இடம் பெற்ற பாடல்களும் தான்.
‛சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...’
‛புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக...’
‛எங்கிருந்தோ ஆசைகள்...’
‛காசிக்கு போகும் சன்யாசி...’
‛கட்டிமேளம் கட்டுற கல்யாணம்...’
போன்ற பாடல்கள் இன்றும் இன்னிசை விருந்தளிக்கும். எம்.ஜி.ஆர்-ஜெயலிதா ஹிட்ஸ் என தேடினால் அதில் சந்திரோதயம் ஒரு பெண் ஆனதோ கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு இசையிலும் தனித்தும் பெற்ற படம்.
படக்குழுவில் இடம் பெற்றவர்கள்
எம்.ஜி.ஆர்
ஜெயலலிதா
மனோரமா
நம்பியார்
நாகேஷ்
எம்.ஆர்.ராதா
எஸ்.என்.லட்சுமி
பண்டரிபாய்
அசோகன்
இயக்கம்: கே.சங்கர்
இசை.எம்.எஸ்.விஸ்வநாதன்
55 ஆண்டுகள் கடந்து சந்திரோதயம் சொல்லும் சேதி!
ஊடக அறம் என்கிற கேள்வி இன்றல்ல, நேற்றல்ல ஊடகம் என்று ஒன்று துவங்கிய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. என்ன, அது காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறியிருக்கிறது. பொதுவாகவே செய்திகள் மீது பொதுமக்களுக்கு பல வித கேள்விகள் இருக்கும். இன்று சமூக வலைதளங்களில் எழும் பல கேள்விகளே அதற்கு சாட்சி. அந்த கேள்விகள் நியாயமானதா, அபத்தமானதா என்கிற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். இது போன்ற கேள்விகளை அன்றே நேரடியாக கேட்டவர் எம்.ஜி.ஆர்., இன்னும் சொல்லப்போனால், எப்படி சந்திரோதயம் ஒரு ஹாலிவுட் படத்தின் கருவை கொண்டதோ, அதேபோல் தான் இன்றைய தலைமுறையில் வெளியான கோ திரைப்படமும் சந்திரோதயத்தின் கருவை கொண்டது எனலாம்.எம்.ஜி.ஆர்., நினைத்த ஊடக அறம் கிடைத்ததா, இல்லையா என்பதை அவரது கடந்த கால மாற்றங்கள் சொல்லும். 55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பேசும் பொருளாக இருக்கும் எம்.ஜி.ஆர்., போன்ற மக்கள் கலைஞன், வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் சமுதாயத்திற்காகவும் குரல் கொடுத்தார்கள் என்பதை தான் சந்திரோதயம் சத்தமாக சொல்கிறது. 55 ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டர்களின் முதல் ஷோ, முதல் காட்சிக்கு முண்டியடித்துக் கொண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரம் சூழ்ந்த சந்திரோதயத்தின் சத்தத்தை தான் இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.