கொரோனா பாதிப்பு தொடர்பான வழக்குகளை கடந்த 30 ஏப்ரல் தொடங்கி தாமாகவே முன்வந்து விசாரணை செய்துவருகிறது உச்சநீதிமன்றம். அந்த வகையில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநிலங்களுக்கான தடுப்பூசி விநியோகம் மற்றும் புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி 18-44 வயதினருக்கான தடுப்பூசி ஆகியவை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறது.
அதுகுறித்த இன்றைய வழக்கு விசாரணையில்,’சுகாதாரப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி போடும் நிலையில் 18-44 வயதுடையவர்களுக்கு தனியாரில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனச் சொல்வது அடிப்படையிலேயே அபத்தமானது’ என நீதிபதி சந்திரசூட் கருத்து கூறியுள்ளார்.
மேலும், ‘தடுப்பூசி போடுவது என்பது அத்தியாவசியம்.அரசின் ஒற்றை முக்கியப் பணியாக இது இருக்கவேண்டும்.அதுவும் மத்திய பட்ஜெட்டில் கொரோனாவுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.35000 கோடியில் ஏன் 18-44 வயதினருக்கான தடுப்பூசிகளுக்காகச் செலவிடவில்லை. இதுநாள் வரை இந்தப் பணத்தை அரசு எவ்வாறு செலவு செய்தது ’ என அடுக்கடுக்காகக் கேள்விகளை முன்வைத்துள்ளது நீதிமன்ற அமர்வு. இத்துடன், மொத்தம் தடுப்பூசி போடப்பட்டவர்கள் எண்ணிக்கை, முதல் டோஸ் அல்லது இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டவர்கள், கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனத் தனித்தனியே விவரங்களைத் தரும்படியும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இத்துடன் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மத்திய அரசு இதுநாள் வரை கொள்முதல் செய்ததன் முழு விபரத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.
Also Reads: பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்