சலார் (Salaar Part -1 Ceasefire) திரைப்படம் 2 நாள்களில் வசூலில் 300 கோடிகளை நெருங்கியுள்ளது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கேஜிஎஃப் இயக்குநர்


கேஜிஎஃப் பாகங்களின் மூலம் கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு பிரமாண்ட இயக்குநராக உருவெடுத்த பிரஷாந்த் நீலின் அடுத்த படமாக வெளியாகியுள்ளது சலார் பாகம் 1.


நேற்று முன் தினம் (டிச.22) இப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில்,  நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பிருத்விராஜ் சுகுமாரன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காந்தாரா, கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.


கலவையான விமர்சனங்கள்


இப்படம் வெளியாகி ஒரு பக்கம் ஆகா, ஓஹோ என தெலுங்கு, கன்னட ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்துவருகிறது. ஆனால் மறுபக்கம் அதற்கு சரிசமமாக விமர்சனங்களையும் படம் பெற்று வருகிறது. “பில்டப்பில் படம் இருக்கலாம், ஆனால் பில்டப்பே படமாக இருந்தால் என்ன செய்வது” என ரசிகர்கள் நொந்துகொண்டு வருகின்றனர்.


இதேபோன்ற விமர்சனங்கள் தான் கேஜிஎஃப் படத்துக்கும் வந்திருந்தாலும், கேஜிஎஃப் படத்தில் செய்த மேஜிக்கை பிரஷாந்த் நீல் இந்தப் படத்தில் செய்யத் தவறிவிட்டார் என்றே ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 


வசூல் வேட்டை


ஆனால் இவற்றையெல்லாம் கடந்து கேஜிஎஃப் பாகங்களைப் போலவே சலார் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சலார் திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. அதன்படி சலார் திரைப்படம் இரண்டு நாள்களில் 295.7 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இரண்டாம் நாள் மட்டும் 117 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது.


 






கலவையான விமர்சனங்கள் தாண்டி,  2 நாள்களில் 300 கோடிகளை நெருங்கியுள்ள சலார் படத்தின் வசூல் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் இன்று ஞாயிறு விடுமுறை மற்றும் நாளை கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்கள் என்பதால் படத்தின் வசூல் இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் குறுகிய காலத்தில் 500 கோடிகளை எட்டிய படமாக சலார் உருவெடுக்கும்.


படக்குழு


கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து ரசிகர்களைப் பெற்ற ரவி பர்சூர் தான் சலார் படத்துக்கும் இசையமைத்துள்ளார். சலார் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள கான்சார் உலகம் தனி பாராட்டுகளை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. மீனாட்சி சௌத்ரி, ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க: Salaar Review: எடுபட்டதா சலாரின் சாகசம்? தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா பிரபாஸ்? முழு விமர்சனம் இதோ!


Watch Video : பெரியார் கோயிலை இடிக்க சொன்னாரா? அப்படி செய்பவர்களே ஆத்திகர்கள்தான் : கமலின் பழைய வீடியோ ட்ரெண்டிங்..