என்னுடைய படங்களில்  பகுத்தறிவு வாதம் கோபமாக இருக்காது, கிண்டலாக இருக்கும் என நடிகர் கமல்ஹாசன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’. முதலில் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கினார். அதன்பிறகு அடுத்தடுத்த சீசன்களை அரவிந்த் சாமி, பிரகாஷ்ராஜ் என முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் 2013 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டிருப்பார். 


அந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் எம்.ஆர்.ராதா தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்படும். அப்போது அவரைப் பற்றி சில நினைவுகளை கமல் பகிர்ந்து கொள்வார். அதாவது, “ரத்தக்கண்ணீர் படத்தில் மிகவும் நாத்திகராக வரும் எம்.ஆர்.ராதா கடவுள் பக்தியில் மூழ்கியிப்பவர்களை விமர்சித்திருப்பார். 


அப்படிப்பட்ட எம்.ஆர்.ராதா கடவுள் நம்பிக்கையை கடுமையாக தன் படங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், ஜெயிலில் இருந்து வந்த பிறகு சாமி படத்தில் நடித்தார். இதுபோன்ற பக்தி படங்களில் ஏதாவது ஒரு சக்தி வரும்போது ஆச்சரியமாகவே, பயத்துடனோ பார்ப்பது போன்று தான் நடிப்பு இருக்கும். ஆனால் எம்.ஆர்.ராதாவோ ‘யார் நீ’ என்பது போல கடவுள் முருகனை பார்த்திருப்பார். நான் அப்படி ஒரு லுக்கை எங்கேயும் பார்த்தது இல்லை. முருகனிடம் உரையாடுவது போல அந்த காட்சிகள் இருக்கும். 






அதாவது எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் தன்னுடைய குணம் மாறாமல் நடிப்பவர் தான் எம்.ஆர்.ராதா. செய்தது குற்றமாக இருந்தாலும் ஜெயிலில் இருந்து வந்த பிறகு உள்ளே பிரெஞ்சு கற்றுக்கொண்டதாக கூறி ஆச்சரியப்படுத்தினார். அதேசமயம் என்னுடைய படங்களில் இதே பகுத்தறிவு வாதம் கோபமாக இருக்காது, கிண்டலாக இருக்கும். ஆத்திகத்தை எதிர்க்கும்போது அதிலிருக்கும் நல்ல விஷயங்களை தவிர்க்க கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். நபிகள் நாயகமோ, ஜீசஸ் ஆக இருக்கட்டும். அவர்கள் காலத்தில் பகுத்தறிவாதிகளாக தான் இருந்தார்கள். நல்லதுக்காக ஆரம்பித்த ஆத்திகத்தை, பணம் பண்ணும் நோக்கில் மாற்றப்பட்ட பிறகு தான் எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்கியது’ என தெரிவித்தார். 


அப்போது பிரகாஷ்ராஜ் கமலிடம், ‘நீங்க ஒரு மேடை பேச்சின்போது, கடவுளை நம்புகிறவர்கள் தான் கோயிலை இடிக்கிறார்கள்’ என தெரிவித்திருப்பீர்களே? என கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘ஆமாம். ஒரு நாத்திகரோ, பகுத்தறிவாளரோ அப்படி நினைப்பதில்லை. பெரியார் கூட கோயில் கதவைத் தான் திறந்து விடுவார். நீங்கள் உற்று நோக்கினால் கோயில் பிரவேசம் என்று தான் சொல்வாரே தவிர, கோயிலை இடி என சொல்லமாட்டார். ஆனால் கோயிலை இடிப்பவர்கள் யார் என பார்த்தால் இந்த நம்பிக்கை இருக்கிறவர்கள், அந்த நம்பிக்கை இருக்கிறவர்கள் தான். அதனால் ஆத்திகர் பண்ணும் அட்டகாசம் தான் அதிகம்” என கமல் அந்நிகழ்ச்சியில் பேசியிருப்பார்.