நடிகர் ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டி தனது கணவரின் பிறந்தநாளையொட்டி, கணவரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி அவருக்கு  சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 


இது தொடர்பான நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி, “மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஏதாவது பங்களிப்பை செலுத்துங்கள் என பலரும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதன் விளைவாக அதிகாரபூர்வமாக ஒரு அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என நினைத்து, உதவி தேவைப்படும் தனி நபர்கள், குழந்தைகளுக்கு இதன் மூலம் உதவலாம் என முடிவு செய்தோம். மொத்த சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு பங்களிப்பு செலுத்த இந்த ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. வேறு எந்த பொருளை கிஃப்டாக கொடுத்திருந்தாலும் ரிஷப் ஷெட்டி இந்த அளவுக்கு மகிழ்ந்திருக்க மாட்டார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அறக்கட்டளை மூலம் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்றார்.


ரிஷப் ஷெட்டி பேசுகையில், “சினிமா துறையில் நுழைந்து சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததுக்கு நன்றி. ‘காந்தாரா’ படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பால் அது உலக அளவில் வெற்றி பெற்றது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.


கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன மற்றும் வருமான ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரிஷப் ஷெட்டியை இந்தியா முழுவதும் அறியவைத்தது.


தற்போது இவர் "காந்தாரா" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ரிஷப் ஷெட்டி தனது 40-வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கடந்த 7-ஆம் தேதி கொண்டாடினார். அந்த விழாவில் "காந்தாரா" திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூத கோலா' நடனத்தை மேடையில் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அவரது மனைவி பிரகதி, ரிஷப் ஷெட்டி பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 


Mission Impossible 7 Review: தங்கத்தட்டில் தரமான ஆக்‌ஷன் விருந்து... மிரள வைத்தாரா டாம் க்ரூஸ்? மிஷன் இம்பாசிபள் 7 விமர்சனம்!


CM Stalin Letter To President: முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சம்பவம்... குடியரசு தலைவர் முர்மு என்ன செய்யப்போகிறார்? ஆளுநரின் அடுத்த மூவ் என்ன?