தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், குடியரசு தலைவர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:


ஆளுநர் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும்m பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என, ஆளுநரின் ஒப்புதலின்றி தனது அதிகாரத்தை பயன்படுத்தி  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஆளுநர், அரசின் கடும் எதிர்ப்பால் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆளுநரின் இந்த செயல்பாட்டால், அரசுக்கும் அவருக்கும் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் தான், ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


குடியரசு தலைவரின் நடவடிக்கை என்ன?


முதலமைச்சரின் கடிதத்தின் பேரில், ஆளுநர் ரவியிடம் குடியரசு தலைவர் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளது. அதற்கு ஆளுநர் வழங்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத வகையில் இருந்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரமும் குடியரசு தலைவருக்கு உள்ளது. அதேநேரம், முதலமைச்சரின் கடிதத்திற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் குடியரசு தலைவருக்கு கிடையாது. அந்த கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதிலளிக்காமலே கூட போகலாம். இதனால், முதலமைச்சரின் கடிதம் தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுக்கலாம் அல்லது புஸ்வானமாகவும் போகலாம் என்ற சூழல் உள்ளது.


ஆளுநர் என்ன செய்யலாம்?


சட்ட ஆலோசனைகளை பெறுவதற்காகவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக, ஆளுநர் தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து டெல்லி சென்றுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் தான், ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு எதிர்வினையாக, செந்தில் பாலாஜி விவகாரம், சட்ட-ஒழுங்கு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், தமிழக அரசுக்கு எதிராக குடியரசு தலைவரிடம் ஆளுநர் முறையிடலாம். அதனடிப்படையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என, உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசு தலைவர் உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.


நடக்கப்போவது என்ன?


ஏற்கனவே தமிழகத்திற்கான ஆளுநரை மாற்ற வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான உந்துகோலாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் அமையலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், முதலமைச்சரின் கடிதத்திற்கு எதிர்வினையாக ஆளுநர் எடுக்க உள்ள நடவடிக்கைகள் தமிழக அரசுக்கே தலைவலியாக மாறலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடிதம் மூலம் முதலமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கை என்பது, உடனடியாக எந்தவித பலனையும் கொடுக்காது என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.