மிஷன் இம்பாசிபிள்
மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் ஏழாவது பாகம் மிஷன் இம்பாசிபள் – டெட் ரெக்கனிங் (பாகம் ஒன்று) (Mission Impossible Dead Reckoning - Part 1) . டாம் க்ரூஸ், ரெபெக்கா ஃபெர்குசன், ஹேய்லி ஆட்வெல், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கிறிஸ்டோஃபர் மெக்கரீ, எரிக் ஜெண்டர்சன் திரைக்கதை எழுதி கிறிஸ்டோஃபெர் மெக்கரி இயக்கியிருக்கிறார்.
ஹாலிவுட் சினிமாவை காப்பாற்றுவாரா டாம் குரூஸ்?
ஹாலிவுட்டில் அடுத்தடுத்து வெளியாகும் ஆக்ஷன் திரைப்படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் மொத்த நம்பிக்கையும் டாம் குரூஸ் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஹாலிவுட்டின் கடைசி ஆக்ஷன் ஹீரோ’ என்று சொல்லப்படுகிறார் டாம் க்ரூஸ். மிஷன் இம்பாசிபிள் ஏழாவது பாகத்தில் எதிரியிடம் இருந்து உலகத்தைக் காப்பாற்ற போராடுகிறார் டாம் குரூஸ், ஆனால் இந்த முறை அவர் எதிர்த்து போராடுவது ஒரு மனிதன் அல்ல!
கதைச்சுருக்கம்
பல ஆயிரம் அடிகள் கடலுக்கு அடியில் தொடங்குகிறது படத்தின் முதல் காட்சி. ரஷ்யா ஒரு புதுவிதமான செயற்கை நுண்ணறிவுக் கருவியைக் கண்டுபிடிக்கிறது. இதற்கு என்டிடி (Entity) என்று பெயர். இந்தக் கருவியை வைத்துக்கொண்டு உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் ரகசியங்களையும் தெரிந்துகொள்ள முடியும். =
எவ்வளவு பாதுகாப்பான ஒரு தொழில்நுட்பத்தையும் இந்தக் கருவியால் தகர்க்க முடியும். இந்தத் தகவல்களைக் கொண்டு ஒரு நாடு இன்னொரு நாட்டை கட்டுக்குள் வைக்கலாம். அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தலாம், தொழில்நுட்ப அடிப்படையில் இயக்கும் எந்த ஒரு இயந்திரத்தையும் இதனால் கட்டுப்படுத்த முடியும்.
இப்படியான ஒரு இயந்திரம் யார் கைகளுக்கு வருகிறதோ, அவர்கள் உலகத்தை எப்படியானதாக இருக்க தீர்மானிக்கிறார்களோ அப்படியானதாக மாற்றிவிட முடியும். ஆனால் இவ்வளவு அதிநவீனமான ஒரு கருவி சொந்தமாக சிந்திக்கத் தொடங்கினால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? எண்டிடி என்கிற இந்தக் கருவி சொந்தமாக சிந்திக்கத் தொடங்குகிறது. அதனுடன் படம் தொடங்குகிறது.
MI ஏஜெண்டான ஈத்தனுக்கு (டாம் குரூஸ்) இந்தச் செய்தி வந்தடைகிறது. இந்தக் கருவியை அடைவதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்துவருகின்றன. மேலும் உலகத்தை அழிக்க நினைக்கும் பல வில்லன்களும் இந்தத் தேடலில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தக் கருவியை கட்டுப்படுத்தவோ அழிக்கவோ ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய இரண்டு சாவிகள் இருப்பவர்களால் மட்டுமே என்டிடியைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த இரண்டு சாவிகளை தேடுவதற்கான வேலை ஈத்தனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதைத் தேட தனது இரு பழைய நண்பர்களுடன் செல்கிறார் கதாநாயகன். அவரது வழியில் இடையூராக வரும் கிரேஸ் (ஹேய்லி ஆட்வெல்) தன்னையும் அறியாமல் இந்தப் பிரச்சனையின் அங்கமாகி விடுகிறார். இந்த இரண்டு பாகங்களை தேடிச் செல்லும் வழியில் டாம் குரூஸ் நிகழ்த்தும் அசாதாரண சாதனைகளே மூன்று மணி நேரம் நீளமுள்ள இந்தப் படத்தில் சலிப்படையாமல் நம்மை உட்காரவைக்கின்றன.
புதிதாக என்ன இருக்கிறது?
இந்தப் பயணத்தை மேலும் சற்று சுவாரஸ்யமானதாக மாற்ற ஒரு அம்சத்தை கதையில் சேர்த்திருக்கிறார்கள். ஒரு ஸ்பெஷல் ஏஜெண்டாக ஈத்தன் ஹண்ட் (டாம் குரூஸ்) ஏன் ஆனார் என்பதற்கான காரணம் இந்தப் படத்தின் இணைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கிய எதிரியாக இருக்கும் என்டிடி என்கிற கருவி தன்னைக் கட்டுப்படுத்த இரண்டு சாவிகள் இருக்கின்றன என்பதை அறிந்தே இருக்கிறது.
அதனால் அது தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒருவனைத் தேர்வு செய்கிறது. அந்த ஒருவனுக்கும் ஈத்தனுக்கும் ஒரு கடந்த கால வரலாறு இருக்கிறது. ஈத்தன் ஒரு ஸ்பெஷல் ஏஜெண்டாக மாறியது ஏன், அந்த நபருடன் என்ன தொடர்பு என்பதை நாம் படத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஸ்டண்ட் காட்சிகள் எப்படி?
டாம் குரூஸ் ரசிகர்களுக்கு எந்தவித குறையும் இல்லாத அளவுக்கு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒரே வகையிலானதாக இல்லாமல் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு ஸ்டைலில் அவை அமைந்திருப்பதே இந்தக் காட்சிகளின் சிறப்பம்சம்.
ஒரு காட்சி கதாநாயகனின் புத்திசாலித்தனத்தைக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. அடுத்தக் காட்சி ஜாக்கி சான் படங்களில் வருவதுபோல் விறுவிறுப்பாக மற்றும் நகைச்சுவை கலந்து அமைந்திருக்கிறது. ஆக்ஷன் மட்டுமே அடங்கிய காட்சிகள், பிறகு கடைசியாக தங்கத் தட்டில் விருந்து பரிமாறியதுபோல் படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெறும் ஓடும் ரயிலில் நிகழும் சண்டைக் காட்சி!
படத்தின் தலைப்புக்கேற்றபடி அசாதாரணமான சாதனைகளை கதாநாயகன் செய்யப் போகிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒரு மலையில் இருந்து டாம் குரூஸ் குதிப்பதும் ஓடும் ரயிலில் நின்று சண்டையிடுவது ஆகிய அனைத்தும் டூப் இல்லாமல் டாம் க்ரூஸ் நடித்திருப்பதால் பார்வையாளர்களாகிய நம்மால் முழு ஈடுபாட்டுடன் பிரமிக்க முடிகிறது. அவை ஏதோ கற்பனைக் காட்சிகள் என்று நமக்குத் தோன்றாமல் இருக்கிறது. குறிப்பாக 60 வயதில் டாம் குரூஸ் வேகமாக ஓடும் காட்சிகள் எந்த வித கிராஃபிக்ஸும் இல்லாமல் நம்மை மிரள வைக்கின்றன!
குறையில்லாத படமிருக்கா?
படம் முழுக்க அசாதரணமான ஸ்டண்ட் காட்சிகள் இருந்தாலும் கூட, சில மிகப்பெரிய ஸ்டண்ட் எல்லாம் மிக அசட்டுத்தனமான காரணங்களுக்காக செய்தவையாக எளிதில் தோன்றிவிடுகின்றன. மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இந்த காட்சிகளுக்குப் பின், இன்னும் சற்று வலுவான லாஜிக் இருந்திருக்கலாம்.
அதே சமயம் படத்தின் முக்கிய வில்லனாக இருப்பது சுயமாக சிந்திக்கும் திறன்கொண்ட ஒரு ரோபோட். அப்படியான சூழலில் எதிரியின் முழு பலமும் என்னவென்பதை உணர்த்தாமல் சின்ன சின்ன எதிரிகளுடன் அசால்ட்டாக கதாநாயகன் வென்றுவிடுவது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. மூன்று மணி நேரம் நீளும் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே எதிரியின் தந்திரத்தை நாம் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் புகுந்து விளையாடியிருக்கலாம்.
அடுத்த பாகம்
முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு சின்னக் குறிப்புடன் முடிகிறது படம். அடுத்தப் படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் நிச்சயம் நிலத்திலோ ஆகாயத்திலோ மட்டும் கிடையாது என்பது உறுதி!